Friday, April 17, 2015

‘தொடரோட்டம்’நகரத்தின் சாலை நெரிசல்களில்
மரணத்தின் துரத்தலுக்கு பயந்து
அலறிக்கொண்டு விரைகின்றன ஆம்புலன்ஸ்கள்.
இந்த தொட்டுப்பிடி விளையாட்டில்
சிலநேரம் விட்டுக்கொடுத்து சிரிக்கின்றது!
மரணம்.

-    பாபாசரண்

Saturday, December 7, 2013

திண்ணை


நாடோடிகள் இரவில் நலமாய் தூங்கவும்...
நாய்கள் தம் சேய்களை ஈனிப்பேணவும்....
நண்பர்கள் நாலு பேர் வந்தமர்ந்து,
நாட்டைப் பற்றிக் கவலை கோரவும்....
வீட்டுத்தலைவி மாதம் மூன்று நாள்,
விடுப்பெடுத்து மீண்டும் கல்லாங்காய் ஆடவும்..
ஜூனியர் சிங்கர்களுக்கு சீனியர் சிங்கர்கள்,
சுதியும் லயமும் சுரமும் கூறவும்...
நம் முனோர்கள் வீட்டின்முன் கட்டிவைத்தார்
திண்ணை!
நாமிதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த இடம்
சென்னை!

-    பாபாசரண் 

Monday, October 22, 2012

பசித்த விருந்தாளி
சமையற்கட்டின் சன்னல் அருகே
வந்தமர்ந்து கரைகிறதந்த காகம்!
என்னங்க யாரோ விருந்தாளி வரப் போறாங்க!
என்கிறாள் மனைவி.  
வந்திருக்கும் பசித்த விருந்தாளி
அந்தக் காகம்தான் என்பதறியாமல்!
-    பாபாசரண் 

Tuesday, August 28, 2012

தாத்தா பாட்டுஓடி விளையாடலாந்தான் – என்
ஹோம்வொர்க்கை யாரு செய்வா தாத்தா?
கூடி விளையாடலாண்னா – நான்
குடும்பத்தில் ஒத்தப்புள்ள தாத்தா!

சின்னஞ்சிறு குருவி போல... – நான்
குருவியே பாத்ததில்லை தாத்தா!
வண்ணப் பறவைகளைக் கண்டு... – அதுக்கு
வண்டலூரு போகணுமே தாத்தா?

கொத்தித் திரியுமந்த கோழி... – கறிக்கடை
கூண்டுக்குள்ள பாத்திருக்கேன் தாத்தா!
எத்தித் திருடும் அந்த காக்காய்... – அதுக்கு
எப்பவாச்சும் சோறு வைக்கும் எங்காத்தா!

பாலைப் பொழிவது பசுவா? – அய்யே...!
அது பாக்கெட்டுலதான் கெடைக்கும் தாத்தா!
வாலைக் குழைத்து வரும் நாய்தான்.. – அது
வாங்க முடியாத விலை தாத்தா!

பொய் சொல்லக் கூடாதா தாத்தா? – அப்ப
பொழைக்கவே முடியாதாம் தாத்தா!
தெய்வம் நமக்கு துணையா தாத்தா? – அதையே
திருடிட்டு போறாங்களே தாத்தா?

பாதகம் செய்யறவங்க எல்லாம் – பெரிய
பதவியில் இருக்காங்க தாத்தா!
அட மோதறதை விடு தாத்தா! – அவன்
நம்மை முடிச்சிடுவான் மொறைச்சு பாத்தா!

சாதிகள் இல்லியா தாத்தா? – ஸ்கூல்ல
சாதி சர்ட்டிபிகேட் கேட்டாங்களே தாத்தா?
நீதி உயர்ந்த மதி கல்வி – ஆனா
அதுக்கு நெறைய செலவாகுது தாத்தா!

காலை எழுந்தவுடன் பரபரப்பு! – பின்பு
கழுதை போல் பொதி சுமப்பு
மாலை முழுதும் ஹோம்டியூஷன் – என்று
வழக்கப் படுத்திட்டாங்க தாத்தா!

Sunday, August 26, 2012

கலைந்த கனவுபல்லவி 

காரணம்  இன்றி கலையும் கனவுபோல்
காதலும் ஒருநாள் கலைந்தது!
நான் கண்களுக்குள்ளே தீட்டிய ஓவியம்
கண்ணீர் மழையில் அழிந்தது!
கண்கள் மூடி காத்திருந்தால்
கனவுகள் மீண்டும் தொடர்வதில்லை!
கைகள் தவறிய காதலும் அதுபோல்
கனவிலும் மீண்டும் வருவதில்லை!                       (காரணம் )

சரணம் 

காதலன் இல்லை  என்பதனால்
காதல் இல்லை என்றாகிடுமா?
உன் கைகள் வரைந்த கடிதங்களென்ன
கரையான் தின்னும் காகிதமா?
உச்சியில் நீ இட்ட முத்தமொன்று
உதிராப் பருவாய் உறுத்திடுதே!
நான் உனக்காய் உதட்டில் தேக்கிய முத்தம்
உலராமல் இன்னும் ஊறிடுதே!                                (காரணம் )

சரணம் 

காதல் இல்லா இரவுகளை - என்னால்
கற்பனை  செய்யவும் முடியவில்லை!
காலையில் உன்முகம் பார்க்க இல்லையெனில்
கண்களைத் திறந்தும் பயனில்லை!
கடைசியாய் உன் கண்களைக் கண்ட நிமிடம்
காலம் முழுவதும் மறக்காது!
என் கற்பும் ஒருநாள் களவு போகலாம்
காதல் மட்டும் இறக்காது!

Wednesday, April 11, 2012

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்"


நான்கில் ஒரு பங்கு
நிலம் கொடுத்தான்!
நந்தவனங்கள் மலை
கொடுத்தான்!
நான்காயிரம் கோடி
உயிர் கொடுத்தான்!
அவை நலமாய் வாழ்ந்திட
 மழை கொடுத்தான்!
அண்டம் என்றொரு
வெளி கொடுத்தான்!
அதிலகிலம்  சமைத்திட
ஒளி கொடுத்தான்!
ஓராயிரம் கோடி
கொடை கொடுத்தான்!
உலகிற்கே ஓசோன்
குடை கொடுத்தான்!
இத்தனையும் சமமாய்
கொடுத்திட்ட இறைவன்
குரங்கிற்கு ஓரறிவைக்
கூடக் கொடுத்தான்!
அது குதித்தாடிக் குவலயம்
குலைத்தது காண்!

Sunday, March 18, 2012

மரண தண்டனை


(குமுதம் நாளிதழில் வைரமோதிர பரிசு பெற்ற சிறுகதை)

மணிமேகலை தன் கணவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் வெளுத்து எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பிணத்தைப் போல இருந்தது. அவள் மனம் முழுவதும் அவன் கூறிய வார்த்தைகள் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவன் அந்த நாலரை அடி கயிற்றுக் கட்டிலில் தன் ஆறடி உயரத்தை அடக்கி ஒரு கடுமையான நடன முத்திரை போல் படுத்துக்கிடந்தான். நிதானமான நிலையில் இது ஒரு மனிதனால் இயலாத காரியம். மிதமிஞ்சிய போதையில் மட்டுமே இது போன்ற விஷயங்கள் சாத்தியம்.

மணிமேகலை திரும்பி குழந்தையை பார்த்தாள். அந்த கிழிந்துபோன பாயில் அது ஒரு சிதைந்துபோன பொம்மை போல கிடந்தது. மணிமேகலை எழுந்து சென்று குழந்தையை தூக்கினாள், குழந்தைக்கும் ஜுரம் அடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து குழந்தையை திண்ணையில் படுக்க வைத்தாள். தெருவைப் பார்த்த பொழுது அது முழுவதுமாக அடங்கிவிட்டிருந்தது. பாதை முழுக்க மனிதர்களும் நாய்களும் அன்யோன்யமாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

மணிமேகலை திரும்ப வீட்டிற்குள் வந்து கதவை மூடித் தாளிட்டாள். நேற்று நான்கு மணிநேரம் குழந்தையையும் வைத்துக் கொண்டு வெய்யிலில் நின்று ரேஷனில் வாங்கிய மண்ணெண்ணெய் அந்த டின்னில் தயாராக இருந்தது. தீப்பெட்டியை தேடி எடுத்து தயாராக வைத்துக் கொண்டாள். மண்ணெண்ணெய் டின்னை கையால் தூக்கியபோது இது போதுமா என்ற சந்தேகம் எழுந்தது. போதும் என்பதாகத்தான் தோன்றியது. நிதானமாக கட்டிலுக்கு அருகில் வந்து தான் காதற்களிமணம் புரிந்த கணவனின் காலிருந்து மேலாக மண்ணெண்ணெயை ஊற்ற ஆரம்பித்தாள். அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அவன் இருந்த போதையில் இது போன்ற விஷயங்கள் அவனை துளியும் பாதிக்கவில்லை. ஆனால், தலையில் ஊற்றியபோது அவனுக்கு விழிப்புத் தட்டியது என்றாலும் என்ன நடக்கிறது என்பதை அவனால் சரியாக உணரமுடியவில்லை. முதலில் அவனுக்கு மணிமேகலையின் உருவம் தெளிவில்லாமல் தெரிந்தது. பிறகு ஒரு சிறிய தீப்பந்தம் தன்னை நோக்கி வருவதுபோல் தெரிந்தது. அதற்குள் அவன் உடல் முழுக்க உஷ்ணம் பரவ ஆரம்பித்துவிட்டது. அவன் தடுமாறி எழ நினைத்து தரையில் குப்புற விழுந்தான். அவன் கத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். கடைசியாக அவன் சுவாசித்த காற்றில் முடி கருகிய நாற்றம் நிறைந்திருந்தது.

************

நீதிபதி மணிமேகலையை உற்றுப் பார்த்தார். ஒரு செல்லரித்துப்போன சிறந்த ஓவியத்தின் மிக மோசமான பிரதியைப் போல அவள் இருந்தாள். கேஸ் கட்டைப் பிரித்துப் பார்த்தார். மணிமேகலை வயது 23 என்றிருந்தது. காயத்திரியைவிட ஒரு வயது குறைவு என்று நினைத்துக் கொண்டார்.

இந்தப்பக்கம் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டிருந்த மணிமேகலையின் பக்கத்து வீட்டுக்காரியான பழனியம்மாள் ஏதோ தான்தான் மணிமேகலைக்காக ஆஜரான வக்கீல்போல் பரிந்து பேசிக் கொண்டிருந்தாள்.
"சாமி, எங்க தெருவுல இருக்க வேண்டிய புள்ளயே இல்லங்க இது. ஏதோ பெரிய எடமுங்க. இந்த ராச்சசங்கிட்ட மாட்டிக்கிட்டு அது படாத வேதனையில்லீங்க. லாரிக்குப் போயிட்டு பத்து பதனஞ்சு நாள் கழிச்சு வருவான் வந்துட்டான்னா அடி ஒத தாங்க. அப்பக்கூட இந்தப்புள்ள வாய்விட்டு ஒரு வார்த்த எங்ககிட்ட பொலம்புனதில்லீங்க, பிரசவத்தப்பக்கூட அவன் ஊர்ல இல்லீங்க. ஏதோ சத்தம் கேக்குதுன்னு நான்தான் ஓடிப்போய் பாத்துட்டு நாலு பொம்பளையாளுங்கள கூப்புட்டு வீட்டுலயே அந்த சின்ன உசுர மீட்டுக் குடுத்தமுங்க, ஊர் பூரா கூத்தியா வெச்சுட்டு அலஞ்சாங்க அவன், அது தெரிஞ்சுகூட இந்தப்புள்ள வாய் தொறந்து ஒரு வார்த்த கூட கேட்டதில்லீங்க. இந்த அளவுக்கு இந்தப்புள்ள போயிருக்குன்னா இதுக்குமேல என்ன கொடும செஞ்சானோ தெரியலீங்களே" என்றாள். சொல்லி முடித்துவிட்டு முந்தானையால் கண்ணை துடைத்துக் கொண்டாள்.

மணிமேகலைக்கு ரொம்ப நேரமாக நிற்பது கஷ்டமாக இருந்தது. ஜுரம்  இன்னும் விட்டபாடில்லை. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலை என்றிருந்தது. யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. வெளியே ஒரு பஸ் ஹார்ன் விட்டுவிட்டு அடித்த சத்தம் கேட்டது.

***********

மணிமேகலை பஸ் ஸ்டான்டில் ஒரு தவிப்புடன் நின்று கொண்டிருந்தாள். இன்று மட்டும் நேரம் மிக மெதுவாய் போவதாக தோன்றியது. அவள் கட்டியிருந்த பச்சை தாவணி மற்றும் பாவாடையை ஒரு முறை, சரி பார்த்துக் கொண்டாள் பாவாடை இன்னும் சரியாக காயவில்லை, நேற்று இரவு அவசரமாக துவைத்தது. காலையில் அம்மாகூட திட்டினாள். "ஏண்டி சரியா காயக்கூட இல்ல இத ஏண்டி கட்டிக்கிட்டு போற வேற பாவாடையா இல்ல ஒங்கிட்ட"

 இவள் "மேட்சிங்கா இல்லையேம்மா" என்று கூறிக்கொண்டே அந்த கடிதத்தை ஒரு முறை படித்துப் பார்த்தாள், "நேற்று நீ சிரித்தபோது உன் கன்னத்தில் விழுந்த சிகப்பு சிக்னலைக் கண்டு என் இதய என்ஜின் நின்றுவிட்டது. நாளை பச்சை தாவணியில் வந்து இயங்க மறுக்கும் இதயத்தை இயக்கி வைப்பாயா?" என்று கேட்டு எழுதியிருந்தது.

 அவளுக்கு மிகப்பரிச்சியமான அந்த ஹார்ன் சத்தம் கேட்டதும் சுறுசுறுப்பானாள்.அவன் தூரத்திலேயே அவளை கவனித்துவிட்டிருந்ததால் வண்டியை அவளின் மிக அருகில் கொண்டு வந்து ஒரு சடன் பிரேக் போட்டு நிறுத்தினான். அவள் வேண்டுமென்றே அவன் முகத்தைப் பார்க்காமல் பஸ்ஸில் ஏறி முன்பக்கமாக நின்றுகொண்டாள். அவன் சத்தமாக, "டேய் மயில்சாமி" என்று கத்தினான் டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்த கண்டக்டர் பின்னாலிருந்து, "என்ன ராஜன்" என்றான். அதற்கு அவன், "இன்னிக்கு சாயந்திரம் ரூமுக்கு வாடா ஒனக்கு சூப்பர் ட்ரீட் தர்ரேன்" என்றான். "என்ன விஷயம்ப்பா?" என்று கேட்டதற்கு "ரூமுக்குவாடா சொல்றேன்" என்றான். அந்த ட்ரீட் மயில்சாமி எழுதி கொடுத்த அந்த கடிதத்திற்குதான் என்பது அப்போது அவளுக்கு தெரியாது.

ஒருநாள் அண்ணாவுக்கு விஷயம் தெரிந்து, "அப்பா இல்லாத பொண்ணாச்சேன்னு செல்லம் குடுத்தா ஒனக்கு சல்லாபத்துக்கு டிரைவர் கேக்குதா" என்றான். அண்ணா செல்லம் கொடுத்ததாய் அவளுக்கு நினைவில்லை. இவளுக்கு ஏழு வயதிருக்கும் போது அப்பா போனதிருந்தே அம்மாவையும் இவளையும் வேலைக்காரி போலத்தான் நடத்திவந்திருக்கிறான். மேலும் அவன் 'டிரைவர்' 'டிரைவர்' என்று இகழ்ந்து பேசியதாலேயே அவளுக்கு டிரைவர் வேலைதான் உலகின் உன்னதமான வேலையாக பட்டது.

திடுமென ஒரு நாள் பெட்டியைத் தூக்கிக் கொண்டு இரவு பணிரெண்டரைக்கு ராஜன் ரூம் கதவை தட்டியபோது ராஜன் உண்மையிலேயே கலவரப்பட்டுத்தான் போனான். என்றாலும் சக நண்பர்களின் உற்சாகத்தினால் அடுத்தநாள் காலை 5-30 மணிக்கு நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தேவிட்டது. கடைசிவரை இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் என்று ராஜன் சொல்க் கொண்டேயிருந்தான்.

அண்ணா பெரிதாக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, "நீ செத்துப் போயிட்டதா நெனச்சுக்கறேன்" என்று சொல்லியபோது கூட ஒரு லட்சரூபாயை மிச்சப்படுத்திய சந்தோஷம் எவ்வளவு மறைத்தும் அவன் முகத்தில் தெரிந்தது. இங்கிருந்தால் வேறு பிரச்சனைகள் வரலாமென வடக்குப்பக்கம் மாற்றல் வாங்கிக்கொண்டு அம்மாவையும் கூட்டிக்கொண்டு போய்விட்டான். அம்மாவுக்கு அவளைப்பற்றிய அக்கறையைவிட அண்ணாவின் தேவை அதிகமாக இருந்தது.

தான் தண்ணியடித்துவிட்டு வண்டி ஓட்டி ஒரு டீக்கடையை இடித்து நொறுக்கியதும், அதற்காக சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்த ஆபிஸரை வேலைவிட்டு வரும்போது அடித்த அடியில் அவருக்கு கால் உடைந்ததும், அதனால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டதும், மணிமேகலையை கல்யாணம் செய்த வேளைதான் என்ற மிகச்சரியான காரணத்தை ராஜன் ஆறு மாதத்திற்குள் கண்டுபிடித்துவிட்டான். கொஞ்சநாள் யூனியன் பெயரைச் சொல்லிச் சுற்றிக் கொண்டிருந்தவன் கையில் காசு தீர்ந்தவுடன் லாரிக்குப் போக ஆரம்பித்தான்.

மணிமேகலை தான் பாதியில் கைவிட்ட பாலிடெக்னிக் படிப்பினால் ஒரு புண்ணியமுமில்லை என்று பக்கத்து மில் ஒன்றிற்கு வேஸ்ட் காட்டன் பிரிக்கும் வேலைக்கு தினக் கூலியாக போக ஆரம்பித்தாள். முதலில் கர்ப்பம் என்று தெரிந்தபோது கலைத்துவிடலாமா? என்று கூட யோசித்தாள். தன்மேல் அன்பு காட்டும் ஒரு உயிர்கூட உலகத்தில் இல்லையே என்பது நினைவுக்கு வரவே எப்படியும் வளர்த்துவிடலாம் என்று பெற்றுக் கொண்டாள்.

***************

நீதிபதி மணிமேகலையை பார்த்து, "நடந்த இந்த கொலையைப் பத்தி நீ சொல்ல விரும்பறத சொல்லலாம்" என்றார். மணிமேகலை மௌனமாக இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். நீதிபதி, "இப்படி நீ மௌனமா இருக்கறதே உனக்கு மரணதண்டனை வாங்கிக் கொடுத்துடும்ங்கறது உனக்கு தெரியுமா? நீ உன்னுடைய நியாயத்தை எடுத்து சொன்னா அது சட்டப்படி உனக்கு கிடைக்க இருக்கும் மரணதண்டனையிருந்தாவது உன்னை காப்பாத்தலாம் இல்ல" என்றார்.

மணிமேகலை நீதிபதியை நிமிர்ந்து பார்த்தாள், "நான் உண்மையை சொன்னா கண்டிப்பா என்னை மரண தண்டனையிருந்து காப்பாத்திடுவீங்களா?" என்று கேட்டாள். நீதிபதி ஏற்கனவே அவளின் வயதையும் குழந்தையையும் மனதில் கொண்டு அவளுக்கு மரண தண்டனை கொடுப்பதில்லை என்று தீர்மானித்திருந்தார் என்றாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "சட்டப்படி என்னால் முடிந்ததை செய்கிறேன்" என்றார். மணிமேகலைக்கு எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

************

மணிமேகலைக்கு ஜுரம் ஒரு வாரமாக விட்டாபாடில்லை. அவளும் மருந்துக் கடையில் கேட்டு சில மாத்திரைகளை சாப்பிட்டிருந்தாள். இன்று வேலைக்குக்கூட போகமுடியாத அளவுக்கு அசதியாக இருந்தது. கையில் பதினைந்து ரூபாய்தான் இருந்தது. பழனியம்மாள்தான், "இதப்பாரு கண்ணு இங்க பக்கத்தில் இருக்கற பெரியாஸ்பத்திரில புதுசா ஒரு டாக்டரம்மா வந்துருக்குது சிரிச்சு சிரிச்சு பேசுது, நல்லா பாக்குது, போயி காட்டிட்டுவா கண்ணு, எதுனாலும் வெஷ ஜொரமா இருக்கப்போவுது" என்றாள்.

மணிமேகலை போனபோது ஆஸ்பத்திரியில் அதிகமாக கூட்டமில்லை. ஆறாவது ஆளாக டாக்டரை பார்த்துவிட்டாள்.
டாக்டர், "எத்தனை நாளா இந்த ஜுரம் இருக்குது?" என்று கேட்டாள்.

"பத்து நாளாங்க"

"ஏன் இவ்வளவு நாளா வரலை"

"கடையில மருந்து வாங்கி சாப்பிட்டேன், கேக்கல"

"சரி, இதுல யூரின், ப்ளட் டெஸ்ட்டுக்கு எழுதியிருக்கறேன் 11ம் நம்பர்ல குடுத்தா டெஸ்ட் எடுப்பாங்க ரிசல்ட்டை வாங்கிட்டு வந்து என்னப் பாரு"

டெஸ்ட் எடுக்குமிடத்தில் 12.30க்கு மேல்தான் ரிசல்ட் கிடைக்கும் என்று சொல்விட்டார்கள். மணிமேகலைக்கு வெய்யில் வீடுவரை போய்வருவது கஷ்டமாக இருந்தது. பக்கத்தில் இருந்த ஒரு டீக்கடையில் ஒரு பால் வாங்கி ஆற்றி குழந்தைக்கு கொடுத்துவிட்டு தானும் ஒரு டீயை
குடித்துவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.

பன்ணென்டரைக்கு போனபோது டெஸ்ட் எடுத்தவன் "உன்னை பெரிய டாக்டர் வரச் சொன்னாங்க" என்றான். ரிசல்ட் கேட்டதிற்கு அவர்களிடமே இருப்பதாக சொன்னான்.

பெரிய டாக்டர் மணிமேகலையை பார்த்து, "ஒன் புருஷன் கூடவரலியா" என்றார்.

"அவரு லாரி டிரைவருங்க, வெளியூர் போயிருக்காருங்க"

"கொழந்தைக்கு என்ன வயசாகுது"

"ஒண்ணரை வயசுங்க"

"கல்யாணம் ஆயி எத்தன வருஷம் ஆவுது"

"நாலு வருஷம் ஆச்சுங்க"

"கொழந்தைக்கும் ஒரு டெஸ்ட் எழுதித்தர்றேன் எடுத்துக்கிட்டு வந்துடு"

"குழந்தைக்கு ஜ÷ரமில்லீங்களே"

"எதுக்கும் எடுத்துறுவம்" என்றவர், "ஒடனே ரிசல்ட் குடுத்துடுவாங்க எங்கேயும் போகவேண்டாம்" என்றார்.

அதேபோல் குழந்தைக்கு இரத்தம் எடுத்து அரைமணிக்குள் ஒரு வெள்ளை சட்டைக்காரன் வந்து, "நீதான் மணிமேகலையா பெரிய டாக்டரம்மா கூப்பிடுறாங்க" என்றான்.

பெரிய டாக்டர் முகத்தில் இருந்த தயக்கம் இவளுக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது. டாக்டர் அவளை நேராக பார்க்காமல், "உன் புருஷனை வரச்சொல்ரியா?" என்றார்.

"அம்மா அவர் எப்ப வருவார்னே தெரியாதுங்க, எதுவா இருந்தாலும் எங்கிட்டயே சொல்லுங்க" என்றாள்.

"நீ என்ன படிச்சிருக்கே?"

"பாலிடெக்னிக் பாதியில நின்னுட்டங்க"

டாக்டர் ஒன்றும் பேசாமல் இரண்டு ரிசல்ட் பேப்பர்களையும் அவள் கையில் கொடுத்தாள்.

**************

மணிமேகலை விளக்கு கூட ஏற்றாமல் வீட்டின் வாசலேயே உட்கார்ந்திருந்தாள், செல்வன் வந்தான் அவனை பார்த்தவுடனே ராஜன் வந்துவிட்டதுஅவளுக்குத் தெரிந்தது. செல்வன் ஆட்டுக்கறியை அவளிடம் கொடுத்துவிட்டு, "அக்கா, அண்ணன் ராத்திரிக்கு வீட்டுக்கு வந்துர்றதா சொன்னாரு" என்றான்.

மணிமேகலை பேசாமலிருந்தாள், செல்வன் கொஞ்சம் தயங்கிக்கொண்டே சொன்னான், "அக்கா தப்பா நெனச்சுக்காதீங்க நான் அண்ணங்கிட்டிருந்து நின்னர்லாம்னு இருக்கேன், நாளையிருந்து வேற வண்டிக்குப் போகப் போறேன்" என்றான்.

மணிமேகலை ஒன்றும் பேசவில்லை. அவனே தொடர்ந்து, "உங்ககிட்ட சொல்லவேணாமுன்னுதான் நெனச்சேன். உங்க மூஞ்சிய பாத்துட்டு சொல்லாம இருக்க முடியலக்கா, அண்ணன் இப்பல்லாம் பொம்பளங்க விஷயத்துல ரொம்ப மோசமாயிட்டார்க்கா, ஊருக்கு ஊரு வண்டிய நிறுத்திடரார்க்கா, என்னமோ வெறிபுடுசாப்பல நடந்துக்கறார்க்கா, ரொம்ப குடிக்கிறாரு, கேட்டா பயங்கரமா அடிக்கிறார்க்கா..."

*************

இரவு ராஜன் வீட்டிற்கு வரும்போதே நிறையக் குடித்திருந்தான். மேலும் ஒரு பாட்டில் வேறு வாங்கி வந்திருந்தான். மணிமேகலையை பார்த்து, "என்னடி புருஷன் வந்தா வான்னுகூட கூப்பிடமாட்டியா? எங்கியோ மூலையில உக்காந்திருக்க வந்து சோறுபோடுடி" என்றான்.

மணிமேகலை "நான் இன்னிக்கு சமைக்கல" என்றாள்.

"ஒரு கிலோ கறி வாங்கி குடுத்துவிட்டேன், சமைக்கலயா என்னடி உனக்கு கேடு?"

"எனக்கு உடம்பு சரியில்ல பெரியாஸ்பத்திரி போயிருந்தேன். டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு ஒங்களை நாளைக்கு கூட்டிட்டு வரச் சொன்னாங்க"

அந்த போதையிலும் அவன் முகத்தில் கலவரம் தென்பட்டதை மணிமேகலை தெளிவாக பார்த்தாள்.

"எதுக்கு?" என்றான்.

"ஏன் ஒங்களுக்கு தெரியாதா?" என்றாள்.

அவன் முகம் இறுகியது, "தெரியுண்டி ஆறுமாசம் முன்னாடியே தெரியும், அதுனாலதான் என்னால முடிஞ்ச அளவுக்கு நாட்டுக்கு உபகாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன், முந்தா நாள் சேலத்துல ஒரு அயிட்டம் தொழிலுக்குப் புதுசு 15 வயசுதான் இருக்கும். இந்நேரம் அம்பதுபேர் போயிருப்பான்" என்று சொல்விட்டு விகாரமாக சிரிக்க ஆரம்பித்தான்,
கொண்டுவந்த பாட்டிலை திறந்து அப்படியே கவிழ்த்துக் கொண்டு கயிற்றுக் கட்டில் படுத்தான். "விடமாட்டேன்.... என்னால முடிஞ்ச வரைக்கும்..." என்று புலம்பிக் கொண்டே கிடந்தான்.

*************

மணிமேகலை நீதிபதியை பார்த்து, "அய்யா உண்மையைச் சொன்னா மரணதண்டனையிருந்து காப்பாத்தறதா சொன்னீங்களே இந்தாங்கய்யா இந்த மரணதண்டனை உத்தரவை ரத்து செய்ய முடியுமா பாருங்க" என்று கூறி தன் ஜாக்கெட்டிற்குள் மடித்து வைக்கப்பட்டிருந்த அந்த ஆஸ்பத்திரி காகிதங்களை கொடுத்தாள்.

முதல் தாளில் மணிமேகலை வயது 23 எச் ஐ வி பாஸிட்டிவ் என்றும் இரண்டாவது தாளில் பாரதி வயது 1 எச் ஐ வி பாஸிட்டிவ் என்றும் எழுதி சிகப்பு மையினால் வளையமிடப்பட்டிருந்தது.

1994

*********************************************************************************