Friday, March 16, 2012

கேப்ஸ்யூல்

அந்த 'பார்' சிவாவுக்கு முற்றிலும் அன்னியமாக இருந்தது. அது ஒரு மூன்று நட்சத்திர விடுதியின் 'பார்' என்பதாலும், அது அமைந்திருந்த இடம் பெங்களூரின் ஒரு பிரதான சாலை என்பதாலும் மட்டுமே இந்த அன்னிய உணர்வு இல்லை. சிவா சாதாரணமாக 'பாரில்' சென்று மது அருந்துவது இல்லை. அவன் ஒரு பிரம்மச்சாரி என்பதால் அவன் தங்கியிருக்கும் அறையே சனிக்கிழமை இரவுகளில் அவன் நண்பர்களின் விருப்பமான பார் ஆகிவிடும்.

அந்த அரையிருட்டு அறை முழுவதும் ஒரு மேசை கூட காலியாக இல்லை. முற்றிலும் நிறைந்திருக்கவுமில்லை. ஒரே ஒரு மேசையில்தான் ஒருவர் தனியாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். மேலும் மூன்று நாற்காகள் காலியாக இருந்தன. அவருக்கு நேரெதிர் இருந்த நாற்காலியை தவிர்த்து அடுத்த நாற்காலியில் அமர்ந்தான் சிவா.

 
வெயிட்டர் கொடுத்த விலைப்பட்டியலை மூன்று வருடங்களுக்கு முன் சிவா பார்த்திருந்ததால் மயக்கமே போட்டு விழுந்திருப்பான். தற்போதய வேலையும் ஐந்து இலக்க சம்பளமும் அவனுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. முதல் முறையாக இரயிலில் குளிர்சாதன படுக்கை வசதியை அனுபவித்திருக்கிறான் மற்றும் இந்த நட்சத்திர அந்தஸ்து உள்ள விடுதியில் தங்கும் வசதி. முழுக்க முழுக்க நிறுவனத்தின் செலவு, மது அருந்துவது தவிர. அதுவும் அடுத்த ப்ரொமோஷனில் கிடைக்கும் என்று வர்மா சொன்னார்.விலைப்பட்டியலில் இருந்த எந்த ஒரு பானமும் அவனுக்கு தெரிந்த நிறுவனங்களின் தயாரிப்பாக இல்லை. விலையை வைத்துதான் தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். வெயிட்டரை அழைத்து ஒரு லார்ஜ் ரம்மும் கோலாவும் ஆர்டர் செய்தான்.

"
தம்பி தமிழா?" என்றார் எதிரில் இருந்தவர்.

அவருக்கு நாற்பது வயதிருக்கலாம். அவர் காலரில்லாத பனியனும், முழங்கால்வரை நிறைய பைகள் வைத்து தைத்த 'ட்ரௌசரும்' அணிந்திருந்தார். முகத்தில் குறுந்தாடியும், ப்ரேம் இல்லாத கண்ணாடியும் அமர்ந்திருந்தன. இதன் காரணமாக, இந்த உருவத்திற்குள்ளிருந்து வந்த 'தமிழ்' சிவாவை வியப்பிலாழ்த்தியது.
"ஆமாங்க" என்றான்

அவர், "கோயம்புத்தூர் பக்கமா?" என்றார்
"ஆமாங்க ஈரோடு"

"அப்டி போடுங்க, எனக்கு சென்னிமலதான். எப்பிடி கண்டுபுடிச்சேன் பாத்திங்களா? நாட்டுக்கு நாடு மட்டுமில்ல ஊருக்கு ஊரு கூட ஒரு மொக அடையாளம் இருக்குது" என்றார்.
அதை ஆமோதிக்கவோ எதிர்க்கவோ இல்லாமல் மத்தியமாய் சிரித்துவைத்தான் சிவா.

 
"பைதிபை என்பேரு ராக்கியப்பன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் ஷாட்டா 'ராக்கி'ன்னு கூப்டுவாங்க" என்றார்.

அவர் உருவத்திற்கு 'ராக்கி'தான் பொருத்தமாக இருந்தது.
"நான் சிவக்குமார்" என்றான்.

அதற்குள் வெயிட்டர் வந்து ஒரு கிளாசில் ரம்மையும், கோலா பாட்டிலையும் வைத்தான்.

"டேய் அரசு, சார்  நம்ப ஊரு, டச்சர் எல்லாம் சூப்பரா இருக்கணும்" என்று சொல்விட்டு சிவாவை பார்த்து, "இவனும் தமிழ்தான் திருநெல்வேலி  பக்கம்" என்றார்.

அவனும் சிவாவை பார்த்து "வணக்கம் சார்" என்றான். அவன் ஏற்கனவே மாதுளம்பழ மணிகள், வெள்ளரித் துண்டுகள், அவித்த கடலை, முறுக்கு போன்ற ஒரு சமாச்சாரம் ஆகியவைகளை அடுக்கியிருந்தான். திரு. ராக்கி அவர்களின் சிபாரிசின் பேரில் சுடச்சுட ஏதோ ஒரு திண்பண்டத்தையும் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனான்.

"
அப்புறம் சிவா எங்க வேல பாக்கறிங்க? பெங்களூருக்கு என்ன ஆபிஸ் விஷயமாவா? இல்ல பர்ஸனலா?" என்று கேட்டார்.

"
மெட்ராஸ்ல கேர்வெல் க்ரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ்ல சீனியர் அக்கௌண்ட்ஸ் ஆபிஸரா இருக்கேன். இங்க எங்க ப்ரான்ச்சுக்கு ஆடிட்டிங் வந்தேன்"

"
அடடே கேர்வெல்லா பெரிய க்ரூப்பாச்சே ஒங்க பர்சேஸ் ஆபிஸர் ஷ்யாம் எனக்கு ரொம்ப க்ளோசு, நான் மெடிலேப்ஸ்ல ரீஜினல் மேனஜரா இருக்கேன் நாங்க நெறய மெடிசன் சப்ளை பண்றோம் ஒங்க ஹாஸ்பிடலுக்கு"

"
மெடிலேப்ஸா? இன்வாய்ஸ் பாத்திருக்கேன்"

"
ஸீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர்ங்கறிங்க ரொம்ப யங்கா இருக்கீங்க C.A.வா?

"
ஆமாங்க ஆல் இண்டியா எய்ட்த் ரேங்க்"

"அப்டி போடுங்க ரொம்ப சந்தோஷம், இந்த சின்ன வயசுல இவ்ளோ பெரிய போஸ்ட்ல இருக்கீங்க கல்யாணம் ஆகலேல்ல"
"ஆமாம்"

"
ஒன்னும் அவசரமில்ல லைஃப்ப நல்லா என்ஜாய் பண்ணுங்க அப்புறமா பண்ணிக்கலாம்... இங்கதான், தாய்லாந்துல, 'பட்டையா'ன்னு ஒரு ஊரு எங்க ஏன்வல் கான்ஃபரன்ஸ் அங்கதான் நடந்துது. அடா அடா என்னா மாதிரி ஊரு என்னா மாதிரி ஃபிகருங்க, காலைல இருந்து சாயந்திரம் வரைக்கும் பந்த் மாதிரி ஊரே அடைஞ்சு கிடக்கும். ஆறுமணிக்குமேல பாத்தா, ரோடுபூரா கலர்கலரா லைட்டு, ஊரு பூரா க்யூப் பார், லைவ் ஷோ, கொத்து கொத்தா பொண்ணுங்க எல்லாம் 14 இருந்து 18க்குள்ள. ஒரு க்யூப் பார்ல போயி உக்காந்து ஒரு பீர் ஆர்டர் பண்ணா போதும் இந்த தொடைல ஒன்னு அந்த தொடைல ஒன்னு வந்து உக்காந்துக்கும், டச்சரே வேணாம்.." என்று சொல்விட்டு சிரிக்கவாரம்பித்தார்.

சிவாவின் மனக்கண்ணில் வளர்மதி வந்து, "மென்னிய திருகிப் போடுவேன்" என்றாள்.

"
முக்கியமா மசாஜ் பார்லர்ங்க, விதவிதமான மசாஜ்... சான்ட்விச் மசாஜ்  னு கேள்விப்பட்ருக்கீங்களா?" என்றபடி கொஞ்சம் விகாரமாக சிரித்தார்.
"இல்ல"
"... ... அதெல்லாம் சொல்லமுடியாது அனுபவிச்சுப்பாக்கணும்... ரொம்ப ஒன்னும் செலவாகாது ஒரு முப்பது ரூபா இருந்தா போறும் பேக்கேஜ் டூர்ல போயிட்டு வந்துறலாம்"

"
ஐயயோ.. முப்பதாயிரமா? அவ்ளோ பணம் சேக்கறதுக்கு ஒரு வருஷத்துக்கு மேல ஆகுமே"

அவர் 'ப்ளக்' என்று ஒரு சிரிப்புடன், "என்ன சிவா கிண்டல் பண்றீங்களா? முப்பதாயிரம் சேத்துறதாமே!... கிரெடிட் கார்டு வெச்சுருக்கீங்களா?"

சிவாவுக்கு பெட்டியில் இருக்கும் கார்டு அப்ளிகேஷன் ஞாபகம் வந்தது, "எனக்கு யூஸ் இல்லீங்களே" என்றான்.

"
என்னது? ஹா... ஹா..." என்று அவர் சிரித்த சிரிப்பில் பக்கத்து இரண்டு டேபிள்காரர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.
"கிரெடிட் கார்டுனால யூஸ் இல்லியா...? நீங்க கேப்ஸ்யூல் யுகத்தில இருக்கீங்க மறந்துடாதிங்க. இன்னிக்கு உலகமே சின்ன கேப்ஸ்யூல் சைசுக்கு ஆயிடுச்சு காசு மட்டும் இருந்தா உலகத்தை பொட்டலம் கட்டி பாக்கட்ல போட்டுக்கலாம். காசுகூட நம்ப அப்பன் ஆத்தா சம்பாரிச்சு வச்சதுதான்னு அவசியமில்ல இங்க பாருங்க" என்று ஒரு லெதர் வேலட்டை திறந்து காண்பித்தார். கிட்டத்தட்ட குலுக்கிப் போட்டு ரம்மி ஆடும் அளவுக்கு கிரெடிட் கார்டுகள் இருந்தன.

"
நான் ஒரு பேங்க் உடறது கெடையாது. மொத்த கிரெடிட் லிமிட் அஞ்சு லச்சத்துக்கும் மேல"

"
இன்ட்ரஸ்ட் எக்கச்சக்கமா போடறாங்களே" என்றான்.

"
அட... இன்ட்ரஸ்ட்ட உடுங்க எவன் நம்பள நம்பி இவ்வளோ பணம் தருவான்? மறந்து போச்சா? நம்ம அப்பனும் ஆத்தாளும் பத்தாயிரத்துக்கு நகையையும், பத்தரத்தையும் தூக்கிக்கிட்டு பேங்குக்கு அலைஞ்சதெல்லாம்"

சிவாவுக்கு அம்மாவின் அட்டிகை இன்னும் பேங்கில் இருப்பது நினைவுக்கு வந்தது. நகை அடகு வைக்கக்கூட எத்தனை நிபந்தனைகள்? குறிப்பிட்ட தினத்தில்தான் கொடுப்பார்கள். அன்று 'அப்ரைஸர்' வரவில்லை என்றால் அடுத்த வாரம்தான். அதுவும் அதே பேங்கில் அக்கௌண்ட் இருந்தால் பிரச்சனை இல்லை. இல்லாவிட்டால் அக்கௌண்ட் உள்ளவரின் சிபாரிசு வேண்டும். இப்பொழுதெல்லாம் ஒரு நல்ல வேலை இருந்துவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு கடன்தர எத்தனை நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

"
இப்ப என்னை எடுத்துக்கங்க வீடு லோன்தான், காரு லோன்தான், பர்ஸனல் லோன் எல்லாம் சேத்து ஒரு செக்யூரிட்டியும் இல்லாம, எவனெவனோ சேந்து இருபது லட்சம் குடுத்துருக்கானுங்கன்னா பாருங்களேன்!"

சிவாவின் C.A. மூளை வேகமாக கணக்குப் போட்டு மாதம் இருபதாயிரத்துக்கு மேல் வட்டி மட்டும் கட்டவேண்டும் என்றது. சிவா அவரை ஒரு முறை கூர்ந்து பார்த்தான். அவரைப் பார்த்தால் இருபது லட்சரூபாய் கடனாளியாய் தெரியவில்லை. சிவாவின் அப்பா மூத்த பெண் கல்யாணத்திற்கு வாங்கிய இருபதாயிரம் கடனுக்காக இரண்டு மாதம் ஷேவ் செய்யாமல் அலைந்தது ஞாபகத்திற்கு வந்தது.

"
ஒரு கிரெடிட் கார்டுதான் நானா அப்ளை பண்ணேன். அதுக்கப்புறம் மத்தவனெல்லாம் வெரட்டி வெரட்டி குடுத்தானுங்க. நீங்க பாத்தது எல்லாம் கிரெடிட் கார்டு இல்ல. மூணு பிரிவிலைட்ஜ் கார்டும் இருக்குது . இது வீடு தேடி வர்ர ஸ்ரீதேவி மாதிரி மத்த கிரெடிட் கார்டு கணக்கு வழக்கை பாத்துப்பிட்டு ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் அனுப்புவான் இந்த கார்டை யூஸ் பண்ணி நீங்க எந்த பொருள் வேணா வாங்கிக்கலாம் மாசாமாசம் .ஸி இன்ஸ்டால்மெண்ட்ல கட்னா போதுமின்னு, என் பொண்டாட்டி பாத்தா உடுவாளா? என் வீட்ல வந்து பாருங்க ஒரு பெரிய ஹோம் அப்ளையன்ஸ்ஸஸ் கடைல இருக்கற ஒரு பொருள் இல்லேண்ணா என்னன்னு கேளுங்க. இதையெல்லாம் காச சேத்துவச்சு வாங்கமுடியுமா?"

சிவாவுக்கு சற்று மலைப்பாகத்தான் இருந்தது.

"சிவா, ஒரு அஞ்சு வருஷத்துல இந்தியாவோட மாற்றத்தப் பாத்திங்களா? முன்னெல்லாம் அம்பாஸிடரும் ஃபியட்டும்தான் ரோட்ல ஓடும். மாருதியையே என்னமோ ஃபாரின் கார் மாதிரி பாப்பாங்க. இப்ப எந்த இண்டர்நேஷனல் கம்பெனி காரு இந்தியாவுல இல்ல சொல்லுங்க. அட... பேங்குக்கு போயி நம்ப போட்ட பணத்த எடுக்கணுமுன்னா மதியம் ஒரு மணிக்குள்ள போகணும். டோக்கன் வாங்கிட்டு பெரியாஸ்பத்திரில உக்காரர மாதிரி உக்காரணும். இப்ப பாருங்க கார்ப்பரேட் பேங்குக்காரன் முக்குக்கு முக்கு ATM வச்சுட்டான். நைட் ஒரு மணிக்கு டிஸ்கோத்தே முடிச்சுட்டு போய் கார்டை சொருகுனா பொல பொலன்னு பணம் கொட்டுது. அதுகூட முடியாதவங்க வீட்ல இருந்தே போன் பண்ணுனா
பணத்தை பார்சல் பண்ணி வீட்டுக்கே கொண்டுவந்து தர்றான். இப்போ வீட்ல ஒரு கம்ப்யூட்டர் வாங்கி இண்டர்நெட் கனெக்ஷன் குடுத்துட்டா உக்காந்த இடத்துலயே உலகத்தையே சுத்தி வந்துறலாமே. கிரெடிட் கார்டும் இருந்துட்டா உலகத்தையே வாங்கி அலமாரியில அடுக்கிடலாமே, அதுனாலதான் சொன்னேன் நாம கேப்ஸ்யூல் யுகத்துல இருக்கமுணு. ஆனா நம்பாளுங்க இன்னும் ஐம்பது வருஷம் பின்னாலதான் இருக்காங்க. எங்க அம்மாவையே எடுத்துக்கங்களேன், எழுபத்துரெண்டு வயசாகுது. இன்னும் தோட்டத்துல மண்ண கொத்திக்கிட்டு இருக்குது. எங்கூட வந்துருன்னா தோட்டத்தை யார் பாப்பா?ங்குது. தோட்டம்னா ஒன்னும் பெரிய ஃபார்ம் கெடையாது. வெறும் அஞ்சு ஏக்ரா, அதுல எங்க அப்பா சமாதி இருக்கு. அதனால அத விக்கக்கூடாதாம். தனக்கும் அதும்பக்கத்திலதான் சமாதி கட்டணும்ங்குது. சரி தொலையுதுன்னு மாசம் ஒரு ஆயிரம் ரூபா அனுப்பட்டுமான்னு கேட்டா "எனக்கெதுக்கு கண்ணு காசு, இங்க வெளயறத புடுங்கி திண்ணாலே போதும். மேல எதுனாச்சும் வேணுமுன்னா மிச்சம் இருக்கற காய்கறிய சந்தைல போட்டு வாங்கிக்குவேன். புள்ளைங்களுக்கு எதுனாச்சும் வாங்கிக் குடுங்குது. அதோட உலகம் அஞ்சு ஏக்கர்தான்."

இதற்குள் அவருக்கு மூன்று 'லார்ஜ்'கள் வந்துவிட்டன. சிவா முதல் லார்ஜையே இன்னும் முடிக்கவில்லை.

"என்ன சிவா ரொம்ப ஸ்லோவா போறீங்க?"

"
கோலா ரொம்ப கோல்டா இருக்கு, நேத்திலருந்து எனக்கு கொஞ்சம் கோல்டு"

"
அட அவ்வளதான அடுத்த லார்ஜ் நான் சொல்ற காம்பினேஷன்ல அடிங்க நாளைக்கு காலைல லங்ஸ்ஸு கிளீனாயிடும்"

"
அரசு" என்று உரக்கக் கூப்பிட்டார். அவருக்கு ஓரளவு போதை ஏறியிருந்தது அவர் குரலின் உச்சஸ்தாயில் தெரிந்தது. அரசு ஓடிவந்தான்.
"சாருக்கு அடுத்த லார்ஜ் ஜிஞ்சர் லெமன் போட்டு கொண்டா"என்றார்.

"
எதுக்கு சார்? எனக்கு ஏற்கனவே பித்த ஒடம்பு ரிஸ்க் வேணாமே"

"
எடுக்கணும் சிவா லைஃப்ல ரிஸ்க் எடுக்கணும். என்னப்பார் இந்தக் கம்பெனி எனக்கு பதிமூணாவது கம்பெனி. பதினஞ்சு வருஷத்துல பதிமூணு கம்பெனி மாறிட்டேன். அதுனாலதான் இன்னிக்கு அலவன்ஸ் எல்லாம் சேத்து மாசம் அறுபதாயிரம் வாங்கறேன். ரிஸ்க் எடுத்தாதான் லைஃப் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்" என்றபடி மீதமிருந்த பாதி கிளாசை ஒரே மடக்கில் குடித்து முடித்தார்.

"
ஒங்க மிஸஸும் வேலைக்குப் போறாங்களா?" இந்த கேள்வி அவரது முகத்தில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. சற்று நேரம் தலையை கவிழ்ந்து கொண்டிருந்தார். மெதுவாக ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கூர்ந்து கேட்டதில், "பிட்ச்... பிட்ச்..." என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

திடீரென்று, "வேலைக்குப்போய் கிழிச்சா... திங்கத் தெரியும்... தூங்கத் தெரியும்... சீவி சிங்காரிச்சுட்டு அலைய தெரியும்... சிவா கல்யாணம் பண்ணிக்காதடா.. வேணாம்" என்றார்.

இப்போது வாய் குழற ஆரம்பித்திருந்தது. "அழசு ரிப்ப்பிட்" என்றார்.

சிவாவுக்கு இப்பொழுது சற்று பயமாக இருந்தது, அரசுவைப் பார்த்து,

"ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு போல இருக்கே" என்றான்.

"
டோண்ட் ஒர்ரி, ஐம் ஆல்ரைட் சிவா இப்ப பார், கரெக்டா டாய்லட் போய் 'உச்சா' போய்ட்டு வர்றேன் பார்" என்றபடி எழுந்து நடக்கவாரம்பித்தார். நடையில் கொஞ்சம் தள்ளாட்டம் இருந்தாலும் சரியாக டாய்லட்டில் நுழைந்துவிட்டார்.
"அவர் ரெகுலர் கஸ்டமர்தான் ஸார். ஒன்னும் ப்ராப்ளமில்ல பக்கத்துலதான் வீடு" என்றான் அரசு."சரி எனக்கு பில்" என்றான் சிவா.

சிறிது நேரத்தில் அவருக்கு ஒரு லார்ஜும் சிவாவுக்கு பில்லும் கொண்டுவந்து வைத்துவிட்டுப்போனான். அதற்குள் அவரும் டாய்லெட்டிலிருந்து வந்துவிட்டிருந்தார். இப்போது முகம் சற்று தெளிவாய் இருந்தது.

"
என்ன சிவா அவ்வளோதானா?" என்றார் பில்லை பார்த்தபடி
ஏற்கனவே அவர் ஆர்டர் செய்தபடிக்கு வந்திருந்த அந்த விநோத கலவையை பாதி குடித்ததில் சிவாவுக்கு நெஞ்சும் தொண்டையும் எரிந்து கொண்டிருந்தது. அவன் சாதாரணமாக ஒரு குவாட்டருக்கு ஒண்ணரை லிட்டர் கோலா வாங்குபவன். இது போன்ற அதிரடிகள் இன்னும் அவனுக்கு பழகவில்லை.

"சாரி  அவளப்பத்தி கேட்டதுனால கொஞ்சம் டென்ஷனாயிட்டேன்" என்றபடி அடுத்த லார்ஜையும் அடிக்கவாரம்பித்தார்.

"
சிவா நான் ஒங்ககிட்ட ஒரு பொய் சொல்ட்டேன். நான் இப்ப மெடிலேப்ஸ்ல இல்ல ரிûஸன் பண்ணி நாலு மாசம் ஆகுது" என்றார்.
"சாரி... ஏதாவது ப்ராப்ளமா?"

"
என்ன ப்ராப்ளம்...? சேல்ஸ் குடுத்தா ப்ராப்ளமில்ல இல்லேன்னா ப்ராப்ளம்தான்... பொண்டாட்டி புள்ளங்களெல்லாம் விட்டுட்டு நாயா அலஞ்சேன்... நன்றிகெட்ட நாயிங்க..."

சிவா மெதுவாய், "விடுங்க, ஒங்க எக்ஸ்பீரியன்ஸ÷க்கு வேற வேல கெடைக்காதா?" என்றான்.

"
அப்பிடித்தான் பதிமூணு கம்பெனி மாறுனேன்... எல்லாருமே ஒரு தேவிடியா வயித்து புள்ளைங்கதான்..." என்றபடி மிச்சத்தையும் ஒரே மிடறில் குடித்து முடித்தார். இப்பொழுது திரும்ப மவுனமாகிவிட்டார், தலையை தொங்கப் போட்டுக் கொண்டார். மெதுவாக முனகுவது கேட்டது,

"பாஸ்டர்ட்ஸ்... பாஸ்டர்ட்ஸ்... பாஸ்டர்ட்ஸ்"

"
இவனுகதான் பழக்கிவுட்டானுங்க... மொதோ மொதோ கம்பெனி கான்பரன்ஸ்லதான் நான் தண்ணியடிச்சேன். இன்னிக்கு நிறுத்த முடியல"

குரல் குழைந்து போயிருந்தது, "யார் கேட்டா ஸ்டார் ஹோட்டல் ஸ்டே?... யார் கேட்டா ஃப்ளைட் பயணம்?... இவனுக தேவைக்கு என்னை பலி குடுத்துட்டானுங்க, படிக்கிறப்ப தெனம் சென்னிமலையில இருந்து பெருந்துறைக்கு சைக்கிள்ள வந்து போவேன். இப்ப பக்கத்துத் தெருவுக்குக்கூட கார் கேக்குது... இன்னிக்கோ நாளைக்கோ அதையும் புடுங்கிட்டு போயிடுவானுங்க... இன்ஸ்டால்மெண்ட் கட்டி ஆறு மாசம் ஆச்சு. வீட்டுக்கும் நோட்டீஸ் வந்துருச்சு... அதப்பாத்துட்டுதான் அவ போயிட்டா அவங்கப்பன் வூட்டுக்கு, மயிரே போச்சுன்னு... புள்ளைங்களையும் கூட்டிக்கிட்டு போயிட்டா... நான்தான் இப்ப அநாத..."

அவர் இப்போது சன்னமான குரலில் அழவாரம்பித்திருந்தார். சிவாவின் நிலை தர்மசங்கடமாயிற்று. இப்போது திரும்ப தலையை கவிழ்த்துக் கொண்டார். இப்பொழுது முனகுவது சரியாய் புரியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு கர்சீப்பை எடுத்து முகத்தை நன்றாக அழுத்தித் துடைத்துக் கொண்டார்.

"
எல்லாத்துக்கும் ஒரு வழி கண்டுபுடிச்சிட்டேன்" என்றபடி சட்டைப்பையில் இருந்து ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்து அதனுள் இருந்த ஒரு கேப்ஸ்யூலை வெளியே எடுத்தார்.

"இத பாத்தியா இது என்ன வெல தெரியுமா? ஒன்னால சத்தியமா சொல்லமுடியாது. இது வெல ஏழாயிரம் ரூபா... சிங்கப்பூர்லர்ந்து வரவழைச்சேன் இத சாப்ட்டா சரியா ஒரு மணி நேரத்துக்குள்ள ஹார்ட் அட்டாக் வந்துடும்... போஸ்ட் மார்டத்துல கூட கண்டுபிடிக்க முடியாது. ரியல் அட்டாக்னுதான் எழுதுவாங்க... கிரெடிட் கார்டோட முக்கியமான அட்வான்டேஜ நான் சொல்லலையே... ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல இன்ஸ்யூரன்ஸ் இருக்கு. அது தவிர கஐஇ யூனிட் ட்ரெஸ்ட்டுன்னு சேத்து கடனெல்லாம் அடைஞ்சு கைல கொஞ்சம் காசு நிக்கும். இதக்கூட நான் அந்த கழுதைக்காக செய்யல, என் சின்ன பொண்ணு மஞ்சு... மஞ்சு... அவள ஒரு தடவ பாத்துட்டா நிம்மதியா போயிடுவேன்..." மறுபடியும் தலையை கவிழ்த்துக் கொண்டார்


இப்பொழுது"மஞ்சு... மஞ்சு... மஞ்சு..." என்று முனகிக் கொண்டிருந்தார்.
அரசு வந்து மீதிப் பணத்தையும் பில்லையும் வைத்தான். சிவா வைத்த பத்து ரூபாய் டிப்ஸ்ஸ÷க்கு, "தேங்க்ஸ் சார்" என்றான். "அவர் ரொம்ப டிஸ்டர்பா இருக்கார் போருக்கே" என்றதற்கு, "நீங்க கௌம்புங்க சார், இது ஏஸ்யூஸ்வல்தான் கொஞ்ச நேரம் கழிச்சு அவரே கிளம்பி போய்டுவார்" என்றான்.

அடுத்த நாள் முழுநேர அலுவ லில் ராக்கியின் நினைவே சிவாவுக்கு வரவில்லை. திரும்ப ஹோட்ட லில் நுழையும் போது 'பார்' கதவில் 'க்ளோஸ்டு' என்ற போர்டை பார்த்தான். செக்யூரிட்டியிடம் கேட்ட பொழுது நேற்று இரவு பாரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் அதனால்தான் திறக்கவில்லை என்றும் சொன்னான். அதற்குமேல் அவனுக்கு விஷயம் ஒன்றும் தெரியவில்லை.

No comments:

Post a Comment