Sunday, March 18, 2012

ராஜா வேஷம்





அது வழக்கமாக தூக்கத்திருந்து விழிப்பது போல்லாமல் மிக சுகமான ஒரு உணர்வாக இருந்தது. உடல்வலி துளியும் இல்லை, ஒரு வென்னீர் குளியலுக்குப் பின் கிடைக்கும் சுகம் போன்றதாய் இருந்தது. மனம் ஏதோ ஒரு மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருந்தது. இதுநாள்வரை நான் இத்தனை சுகமாய் உணர்ந்ததில்லை. ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் இந்த அறையை துல்லியமாக பார்க்க போதுமானதாய் இருந்தது. சுவர் கடிகாரம் மூன்று பத்து காட்டிக் கொண்டிருந்தது.

இன்னும் விடியவில்லை, இத்தனை காலைப்பொழுதில் பொதுவாய் நான் விழிப்பதில்லை. என் அன்றாட செயல்கள் எல்லாம் குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிடப்பட்டவை. வழக்கமாக நான் இரவு பத்தரைக்குமேல் கண் விழித்திருப்பதில்லை. காலை ஆறு மணிக்குமேல் உறங்குவதும் கிடையாது. அந்த விதியெல்லாம் உடைந்தது ஒரு மாதம் முன்பு, அதிலும் இந்த ஒரு மாத காலமாய் அனுபவித்த உபாதைகள்...

அந்த விபத்துக்குப் பிறகு நேரம், காலம், நாள், கிழமை எல்லாம் போய்விட்டது. கண்விழிக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு புதிய காட்சி போல் தோன்றும். அந்த இடம் ஒரு மருத்துவமனை என்பது மட்டும் அறிவுக்குப் புலப்படும் மற்றபடி புதிய முகங்கள், பழகிய முகங்கள் ஆங்காங்கே வந்துபோகும். பல நேரங்களில் பழகிய குரல்கள் அவரவர் உறவைப் பொறுத்து, "அப்பா", "மாமா", "பெரியப்பா" "இங்க பாருங்க" "யார் வந்துருக்கா பாருங்க?", "கண்ணை தொறந்து பாருங்க" என்பதாய் கேட்டுக் கொண்டேயிருக்கும். சிலசமயம் அந்தக் குரல்களின் தாளகதியே ஒரு தாலாட்டுப் போல உறக்கத்திற்குள் தள்ளிவிடும்.

உணர்வு ஓரளவு திரும்பியபோது அது இன்னும் நரக வேதனையாய் இருந்தது. திரும்பிப் படுக்கக்கூட ஒருவர் உதவி தேவைப்பட்டது. என் அந்தரங்கத்தில் யாருடைய குறுக்கீட்டையும் நான் அனுமதித்ததில்லை. குளிக்கும்போது என் முதுகு தேய்க்க நான் 'காமாட்சியை' கூட அனுமதித்ததில்லை. இப்போது வெள்ளை உடை அணிந்த ஒரு பெண் இயல்பாய் வந்து என் பிறப்புறுப்பை தூக்கி ஒரு பிளாஸ்டிக் சட்டியில் வைத்து "ஒன்னுக்கு வந்தா போங்க" என்கிறாள்.

என்னால் ஓரளவு பேச முடிந்தபிறகு இயன்றவரை எல்லோரையும் திட்டவாரம்பித்தேன். இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல (அவர்களுக்கும்) இதுபோன்ற வசவுகளினாலேயே நான் அலுவலகத்தில் அறியப்பட்டு வந்தேன். அரசாங்கத்தின் மிகப்பெரிய உத்யோகஸ்தன் என்ற அதிகாரம் எனக்கு இதற்கான அனுமதி வழங்கியிருந்தது. யாருமே என்னை எதிர்த்து பேசியதில்லை. அவர்கள் என் வசவுகளை பழகிக்கொள்ள பழகிக் கொண்டார்கள்.

வீட்டிலும் காமாட்சி எனக்கு ஒரு மனைவி போலல்லாமல் ஒரு காரியதரிசியாகத்தான் நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகளைப் பற்றிய செய்திகள் அவள் மூலமாகத்தான் எனக்கு வந்து சேரும். அவையும் மிக அத்யாவஸ்யமான பணத் தேவைகளாய்தான் இருக்கும். மற்றபடி நான் வீட்டில் இருக்கும்போது யார் குரலும் உயர்ந்து கேட்டதாய் எனக்கு நினைவில்லை.

என் அதிகாரச் சட்டையை கழற்றவிடாமல் செய்து கொண்டிருந்தது எனக்கு கிடைத்து வந்த பதவி உயர்வுகள்தான். எளிதில் யாரும் அடையமுடியாத பதவி உயர்வுகளையெல்லாம் நான் அடைந்து கொண்டிருந்தது என் செயல்களுக்கான நியாயமாய் என்னுள் புதைந்துவிட்டது. 'மிஸ்டர் க்ளீன்' என்பது எத்தனை சுகமான வார்த்தை. அதுவும் என் மேலதிகாரியிடமிருந்து அதைக் கேட்க நான் என் தலையைக் கூடத் தரத் தயாராயிருந்தேன். இந்த ஒரு பாராட்டிற்காய் நான் தமிழகத்தின் மிக ஆபத்தான கலவரப்பகுதிகள் மற்றும் வறட்சிப் பகுதிகள் என்று தாறுமாறாக அலைக்கழிக்கப்பட்டு வந்தேன். இதை குறிப்புணர்த்திய என் சில நெருங்கிய நண்பர்களைக்கூட மிக மோசமான வார்த்தைகளால் காயப்படுத்தியிருக்கிறேன். இந்த போதையால் என் குடும்பமும் குழந்தைகளும் அலைக்கழிக்கப்படுவதை நான் உணரவேயில்லை, என்பதைத்தான் மிகச்சரியாக சொன்னான் ரகுபதி.

**************

ரகுபதி வீட்டின் கடைசிக் குழந்தை என்ற சலுகையை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டவன். அதேபோல் அந்த இடத்திற்கான இழப்புகளையும் முழுமையாக அனுபவித்தவன். அவன் பள்ளி இறுதி வகுப்பு முடித்தபோது கீர்த்திவாசன் ரிட்டையர் ஆகியிருந்தார். அத்துடன் தனக்கு கிடைத்த கிராஜுவிட்டி  மற்றும் தன் சேமிப்பை போட்டு ஒரு வீடு கட்டும் முயற்சியில் வேறு இருந்தார். இந்த நிதிச்சுமையில் அவன் படிப்புக்கு அவ்வளவாய் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. "எல்லாம் கரஸ்பாண்டன்ஸ்ல படிச்சு பாஸ் பண்ண சொல்லு, இவனெல்லாம் காலேஜ் போனா உருப்படமாட்டான்" என்று அவன் காதுபடவே அவன் அம்மாவிடம் சொல்விட்டார் கீர்த்திவாசன். அன்று அவன் முதல்முறையாக தண்ணியடித்தான்.

ரகுபதி படிப்பில் அத்தனையொன்றும் சூட்டிகையில்லை. ஆனால் பாலகிருஷ்ணன் அப்படியில்லை. அவன் இவனுக்கு ஒன்பது வயது மூத்தவன் அவன் பள்ளி இறுதித் தேர்வில் வாங்கிய மார்க்கிற்கு மேல்ஜாதியாக இல்லாமல் இருந்திருந்தால் மெரிட்டிலேயே பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும் என்றாலும் ஒரு தனியார் கல்லூரி இடம் தர ஒப்புக்கொண்டது. அதற்கு இரண்டாயிரம் ரூபாய் நன்கொடை கேட்டது.
"நேத்துதான் நம்ம சாமாராவுகிட்ட இதபத்தி பேசிகிட்டிருந்தேன். இந்த பிரைவேட் காலேஜுங்களை எல்லாம் இழுத்து மூடனும்னு. இன்னிக்கு நம்ம வீட்டுக்குள்ளயே வந்துருச்சா? ஒன் பையன்கிட்ட சொல்லு லஞ்சம் குடுத்தெல்லாம் இன்ஜினியர் ஆகவேண்டாம். கெடைக்கிற குரூப்ல ஜாயின் பண்ண சொல்லு"

பாலகிருஷ்ணன் சுபாவத்திலேயே அதிகம் பேசாதவன். பி.எஸ்ஸி ஃபிஸிக்ஸ் முடித்துவிட்டு ஒரு வருடம் ஒரு வேலையும் கிடைக்காமல் சுற்றி, ஒரு மெடிக்கல் கம்பெனியில் ரெப்ரசென்டேட்டிவ்வாக சேர்ந்துவிட்டான்.

***************

அகிலா அப்படி செய்யாமருந்திருந்தால் காமாட்சி இன்னும் கொஞ்சநாள் உயிரோடிருந்திருப்பாள். காமாட்சி உயிரோடிருந்திருந்தால் இப்போது இவ்வளவு அவஸ்தைப்பட தேவையில்லை என்று தோன்றுகிறது. அன்று கூட அகிலாவுக்காக ரகுபதிதான் பரிந்துகொண்டு வந்தான். அதுவே என் கோபத்தை மேலும், கிளறிவிட்டது.

"அக்கா அப்பிடி என்னப்பா பெரிசா தப்புப் பண்ணிட்டா? ஒங்ககிட்ட சொல்ல பயந்துட்டா, இப்பகூட ஒன்னும் இல்ல, ரிஜிஸ்டர் மேரேஜ்தான் ஆயிறுக்கு, நாமளே எல்லாரையும் கூப்பிட்டு ஒரு ரிஷப்ஷன்..."

"வாய மூடுறா நாயே, ஒங்கக்காளுக்கெல்லாம் ரிஷப்ஷன் ஒன்னுதான் கேடு, அதெல்லாம் குடும்பப் பொண்ணுங்களுக்குதான் இது மாதிரி ஓடுகாலிங்களுக்கு இல்ல"

அன்று நான் பேசிய வார்த்தைகள் இன்று எனக்கே அருவருப்பாய் இருக்கிறது. பெற்ற பெண்ணை அத்தனை கேவலமாக பேசியிருக்க வேண்டாம். ஒரு முறை மாப்பிள்ளை பெண்ணை வீட்டிற்கு அழைக்கலாம் என்ற காமாட்சியின் ஒரே ஒரு விருப்பத்தையும் அத்தனை நிர்தாட்சண்யமாக மறுத்திருக்க வேண்டாம்.

காமாட்சியின் சாவில்தான் கணேசன் என்னிடம் தயங்கி தயங்கி கேட்டான்
"மாப்பிள்ளை வந்திருந்தார் பாக்கலயா?"

அந்த வேளையில் கூட அவனை ஏதோ சொல்லி திட்டியது ஞாபகமிருக்கிறது. அன்று என் கண்ணெல்லாம் ரகுபதி மேருந்தது. அவன் மிக மோசமாக அழுது ரகளை பண்ணிக் கொண்டிருந்தான். தண்ணி அடித்திருப்பான்போல் தெரிந்தது.
"டேய், பாலகிருஷ்ணா" அவன எங்கியாவது இழுத்துட்டுப்போடா? பெரிய பெரிய ஆபிஸருங்கள்லாம் வந்திருக்காங்கள்ள" என்றேன்.

பாலகிருஷ்ணனும் அவனைப் பார்த்து பயப்படுவதுபோல் இருந்தது.
காமாட்சி போவதற்கு முன் செய்த புண்ணிய காரியம், பாலகிருஷ்ணன் கல்யாணத்தை முடித்தது. அதுவும் காமாட்சியின் தம்பி கணேசனின் பெண் என்பதால் கல்யாணத்திற்கு நான் ஒரு வெற்றிலை காம்பையும் கிள்ளவில்லை. கணேசனே ஓடி ஓடி எல்லாம் செய்தான். அப்படியும் C.T.O தங்கியிருந்த லாட்ஜுக்கு கார் அனுப்பவில்லை என்று மண்டபத்தில் அத்தனை பேர் எதிரில் அவனை திட்டினேன். அவனை ஒரு பெரிய மனிதனாக நான் என்றுமே நினைத்ததில்லை. ஆனால், இப்போது நினைத்துப் பார்த்தால், வீட்டில் நடந்த ஒவ்வொரு விசேஷத்திலிருந்து, காமாட்சியின் சாவுவரை அவன்தான் என் நிலையை சுமந்தவன்.

எல்லோரும் என்னை ஒரு பொக்கிஷமாகவல்லவா வைத்திருக்கிறார்கள். இதற்காய் நான் அவர்களுக்கென்று என்ன செய்தேன்? இதைத்தானே ரகுபதி அன்று கேட்டான்.

************

"ஹலோஙு ரகுபதி இருக்காருங்களா?"

"ம்... இல்லை"

"எப்ப வருவாருங்க?"

"அவன் எப்ப வருவான், எப்ப போவான்னு பாக்கறதுக்காக நான் இல்ல, இனிமே அவன்பேர சொல்க்கிட்டு எவனும் போன் பண்ற வேல வெச்சுக்காதீங்க, வைடா போன"

எனக்கு அத்தனை கோபம் வந்ததற்கு காரணம் இருந்தது. நான் அப்போதுதான் வீட்டிற்கு வந்தேன். தெருமுனையில் நான் வரும்போது ரகுபதி அங்கு நின்றுகொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் என்னை கவனிக்கவில்லை. அவன் நண்பன் ஒருவன் கவனித்து அவனிடம் சொன்னவுடன் என்னை பார்க்காதது போல் பக்கத்து சந்தில் நுழைந்துவிட்டான். மேலும் எனக்கு அத்தனை கோபம் வந்ததிற்கு காரணம் என்னுடன் ஸ்ரீதரன் நம்பியாரும் வந்திருந்ததுதான்.

*************

ரகுபதி வீட்டில் நுழையும்போதே கீர்த்திவாசன் குரல் உச்சஸ்தாயில் கேட்டது.

"இனிமே எவனாவது ஒன் பேர சொல்கிட்டு போன் பண்ணா நடக்கறதே வேற"

"யார் பண்ணது?"

"யார் பண்ணாங்கண்ணு சாருக்கு குறிச்சுவெக்கணுமோ?"

"யார் பண்ணாங்கன்னு கேட்க்கக்கூட பொறுமையில்ல, அப்புறம் ஏன் கத்துறீங்க"

"ஒனெக்கெல்லாம் எவன்டா பண்ணப்போறான் அதான், ஒங்கூட நின்னு சிகரெட் புடிக்கிறானுங்களே அதுல ஒரு பொறுக்கியாதான் இருக்கும், நம்பியார் வேற பாத்துட்டார். அவமானமா போச்சு, அவர் பையன் ஏஜிஸ் ஆபிஸ்ல ஆடிட்டர் தெரியுமா? ஒன்னவிட ஒரு வயசு சின்னவன்"

"ஆமா, அவங்கப்பா அவன கான்வண்ட்ல படிக்க வெச்சாரு, அதோட இன்ஃப்லூயன்ஸ் யூஸ் பண்ணி வேலையும் வாங்கிக் குடுத்தாறு. நான் பிளஸ்2 முடிக்கறதுக்குள்ள எட்டு ஸ்கூல் மாறுனேன் எல்லாம் கவர்மெண்ட் ஸ்கூல்"

"நல்ல ஸ்கூல்ல சேத்திருந்தா மட்டும் கிழிச்சிறுப்பையோ? ஏறுற மண்டைலதாண்டா ஏறும்"

"ஆமா நான்தான் முட்டாள், அண்ணனையாச்சும் என்ஜினியரிங் படிக்கவெச்சுருக்கலாமில்ல அவனுக்காக இல்லேன்னாலும் ஒங்க ஸர்கிள்ல பெருமையடிச்சுக்கவாவது ஒதவியிருக்குமுல்ல, என் பையன் என்ஜினியர்னு"

"மூடுறா வாய நாயே... எங்கப்பன் ஒன்னும் என்னை பணங்குடுத்து படிக்கவெச்சு வேல வாங்கித்தரல நானே சொந்தமா படிச்சு என்னோட சுய முயற்சியிலதான் இந்த நெலமைக்கு வந்தேன்"

"நீங்க டிகிரி முடிச்சப்ப வேல கெடைக்கிறது ஒன்னும் பெரிய விஷயமில்லை, இன்னிக்கு லட்சக் கணக்கானபேர் டிகிரி முடிச்சிட்டு வேலையில்லாம அலையறாங்க, ஒங்க டிகிரி சர்டிபிகேட்ட எடுத்துக்கிட்டு இப்ப இண்டர்வியூ போயி பாருங்க அப்ப தெரியும்"

"தெண்டச்சோறு திண்ணு திண்ணு ஒடம்புல கொழுப்பேறிப்போச்சோ?"

"புள்ளைக்கு சோறு போடறதே கஷ்டம்னு இருந்தா ஏன் பெத்துக்கணும்? அதுவும் இத்தனை வயசுக்கப்புறம்"

அந்த வார்த்தை கீர்த்திவாசனை மிக மோசமாக தாக்கிவிட்டது. முதலில் தலையில் ஏதோ ஒரு வவி விண்விண் என்றது. அந்த எரிச்சலும் சேர அங்கு பக்கத்திருந்த ஒரு டார்ச் லைட்டை எடுத்து ரகுபதியை அடிக்க ஓடிவந்து, கால்தவறி நடு ஹாலில் சாஷ்டாங்கமாக விழுந்தார். விழுந்தவுடன் வலதுபக்க கையையும் காலையும் அசைக்க முடியவில்லை. மரத்துவிட்டதுபோல் இருந்தது. தரையில் மிக மோசமாக நெளிந்து கொண்டிருந்தார்.

ரகுபதி மிகவும் பயந்துவிட்டான். ஓடிப்போய் தூக்கும்போதுகூட, "விடுறா பிச்சைக்கார நாயே" என்று திட்டிக் கொண்டிருந்தார். ரகுபதி அதை
பொருட்படுத்தாமல் அவரை தூக்கி சோபாவில் உட்கார வைத்தபோது, அவரால் சரியாக உட்கார முடியவில்லை என்பது தெரிந்தது. அப்படியே சாய்த்து படுக்கவைத்துவிட்டு பக்கத்து வீட்டு டாக்டர் மாமாவை கூப்பிட ஓடினான்.

டாக்டர் சிதம்பரம் கீர்த்திவாசனின் பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் நெருங்கிய நண்பர். அவர் பரிந்துரை செய்த ஹாஸ்பிட்டலில் கீர்த்திவாசன் அட்மிட் செய்யப்பட்டார். பாலகிருஷ்ணனும் அந்த ஹாஸ்பிடலில் தனக்கு தெரிந்த டாக்டர் நண்பர்களையெல்லாம் அணுகி தன் உத்யோகத்தின் பலனை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டிருந்தான்.

"ஹெவி ப்ளட் ப்ரஷர்ல இந்த மாதிரி ப்ரைன் ஹெமரேஜ் ஆகறது உண்டு. அதோட உங்கப்பாவுக்கு ஏகப்பட்ட காம்ப்ளிகேஷன்... ஏஜ் என்ன ஆகுது?" என்று கேட்டார் சிதம்பரம்.

"செவன்டி த்ரீ சார்" என்றான் பாலகிருஷ்ணன்.

"கொஞ்சம் கஷ்டம்தான்... பாக்கலாம்" என்றார் சிதம்பரம்.

பதினோரு நாட்கள் ICU வில் இருந்துவிட்டு பனிரெண்டாம் நாள்தான் பேசினார் கீர்த்திவாசன். அதுகூட உடம்பை சுத்தம் செய்த அந்த வார்டுபாயை வலி காரணமாக திட்டிய திட்டாகத்தான் இருந்தது. அதன்பிறகு பிரஞை வருவதும் போவதுமாக இருந்தது. சிதம்பரத்தின் பரிந்துரையின் பேரில் வீட்டிற்கு வந்து மூன்று நாட்களாகின்றன.

**************

என் செல்வாக்கை பயன்படுத்தி எத்தனையோ நண்பர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாங்கித்தந்திருக்கிறேன். அது என் ஈகோவின் விருப்பமான உணவாக இருந்தது. என் பிள்ளைக்கு வேலை கொடுங்கள் என்று கேட்பது அதற்கு கசப்பான மருந்தாய் இருந்திருக்க வேண்டும். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது அவன் படிப்பைக் கெடுத்தது நான்தான் என்பது தெளிவாக தெரிகிறது. அந்தத் தார்மீக கோபம் அவனுக்குள் இருப்பது நியாயம்தானே? பாலகிருஷ்ணன் கூட இன்று ஒரு நல்ல கம்பெனியில் இன்ஜினியராக இருந்திருப்பான். அகிலா... யோசித்தால் அவள் முகம்கூட நினைவுக்கு வர மறுக்கிறது. அத்தனை நெருக்கம் எனக்கும் அவளுக்கும். அவள் என்னுடைய மகள் என்ற ஒரே காரணத்துக்காக தண்டிக்கப்பட்டிருக்கிறாள். இத்தனை நாளாய் ஏன் என் அறிவுக்கு இதெல்லாம் விளங்கவில்லை. இன்று என்ன நேர்ந்தது. என்னவோ ஒன்று என்னிடமிருந்து அகன்றுவிட்டதாய் தெரிகிறதே என்ன அது?

கடிகாரம் இப்போது ஐந்தரை காட்டிக் கொண்டிருந்தது. கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ரகுபதி உள்ளே வந்தான். என் அருகில் வந்து என்னை உற்றுப் பார்த்தான். அவன் முகத்தில் கொஞ்சம் கலவரம் தெரிந்தது. வேகமாக அறையைவிட்டு வெளியேறி விட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரத்தில் சிதம்பரம், ரகுபதி, பாலகிருஷ்ணன் எல்லோருமே அறைக்குள் வேகமாக நுழைந்தார்கள். சிதம்பரம் என் கையை பிடித்துப் பார்த்தார். திரும்பி பாலகிருஷ்ணனிடம் "போயிருச்சுப்பா... கை நல்லா சில்ட்டுப்போச்சு மூணு மூணரை வாக்குல உயிர் பிரிஞ்சிறுக்கும்னு நெனக்கிறேன்" என்றார்.

*********************************************************************************



No comments:

Post a Comment