Friday, March 16, 2012

இச்சை




பேருந்து ஒரு வளைவில் திரும்பும்போது அந்த சுவரொட்டி என் கண்ணில் பட்டது. இந்த 'ஜாதி' சுவரொட்டிகள் என் பார்வையில் இருந்து தப்பியதேயில்லை. பேருந்தின் வேகத்தின் காரணமாக அந்த சுவரொட்டியிலிருந்த எந்த ஒரு எழுத்தையும் என்னால் படிக்கமுடியவில்லை என்றாலும், அந்த ஒழுங்கற்ற கோணங்களில் இருந்த புகைப்படங்களிருந்தே இது 'அப்படிப்பட்ட' திரைப்படத்தின் சுவரொட்டிதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அடுத்த சுவரொட்டிக்காய் என் மனம் அலையவாரம்பித்தது.

இது போன்ற சுவரொட்டிகள் என் கவனத்தை ஈர்க்கவாரம்பித்தது என் கல்லூரி நாட்களில் என்பதாக ஞாபகம். அந்தக் காலத்தில் மிக அரிதான சில ஆங்கிலப் படங்களில் மட்டுமே சில நிழலான காட்சிகள் பார்க்கக் கிடைக்கும். அடுத்ததாக ராஜ்கபூர் படங்கள். மேலைநாட்டு நாகரிகம் அவர் படத்தை முழுமையாக ஆக்ரமித்திருந்ததால் சில அரிதான காட்சிகளை காண இயலும். அடுத்ததாக மாயாஜாலப் படங்கள் என்ற பெயரில் சில மாய்மாலங்கள் வந்து போயின. பின்னர் வந்தவை மலையாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில படங்கள். கேரளத்தில் பெண்கள் உடை அணியும் பாணியே இங்கு ஒரு கிளுகிளுப்பை உண்டு பண்ணிவிடுவதால் எந்த 'வில்லங்கமும்' இல்லாத சாதரண மலையாளப் படங்கள் கூட பெரிதாய் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்தன. இது போன்ற விளம்பரங்களில் கவரப்பட்டு சில அரிதான கலைப்படங்களை பார்த்திருக்கிறேன்.

அடுத்த சுவரொட்டி கண்ணில் பட்டபோது அதன் கவர்ச்சியில் எந்த திரையரங்கு என்பதை பார்க்கத் தவறிவிட்டேன். இது போன்ற படங்கள் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்படுவதால் என்னால் தோராயமாக கணிக்க முடிந்திருந்தாலும், துல்லியமாக தெரிந்து கொள்ளாமல் எப்படி? அதுவும் அந்த குறிப்பிட்ட தியேட்டராய் இருந்துவிட்டால் மிகவும் சிக்கல், அது என் அலுவலகத்தின் அருகில் உள்ள தியேட்டர் என்பதாலும், அதன் நுழைவாயில் ஒரு பிரதான சாலையின் சிக்னலுக்கு அருகில் இருப்பதாலும், பரிச்சியப்பட்டவர்கள் யாரேனும் பார்த்துவிட வாய்ப்புண்டு.
நல்லகாலமாக அது அந்த தியேட்டர் இல்லை என்பது அடுத்து சுவரொட்டி மூலமாய் தெரிந்தது.

இந்த தியேட்டர் அத்தனை பிரச்சனையானதில்லை. இது நான் வாழும் பகுதிக்கு சற்று தொலைவில் உள்ளது, ஆனால் அனுமந்தராவ் அந்தப் பகுதியில்தான் இருக்கிறார். சே, இருந்தாலென்ன. அவர் தியேட்டர் வாசலிலா உட்கார்ந்திருக்கப் போகிறார். அந்தப் பகுதியில் யாராவது பார்த்துவிட்டால் கூட அவரை பார்க்க வந்ததாக சொல்லிக் கொள்ளலாம். இது போன்ற விஷயங்களில் மட்டும் என் மூளை அதிவேகமாக செயல்பட்டு திட்டங்கள் மற்றும் சிறப்பான பொய்களை புனைந்து தருவது எனக்கே ஆச்சர்யமாய் இருக்கும். ஆபிஸில் மிக அல்பமான விஷயத்திற்கு ஒரு உபாயம் தெரியாமல், அதை இலகுவாக சொல்விட்டு ஒரு ஏளனத்தை சிந்திவிட்டுப் போகும் என்னை விட வயதில் குறைந்த மேலாளனின் திமிரின் முன் மூளையை தேடினால் ஆள் கிடைக்காது.

அலுவலகத்தில் ஆஸ்தான இருக்கையில் அமர்ந்ததும், பக்கத்தில் அமர்ந்திருந்த கலியபெருமாள்,"என்ன ஷார் பஸ் லேட்டா?" என்றார்.
"நான் ஏஸ் யூஸ்வல்தான் நீங்கதான் கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டாப்ல இருக்கு"  என்றேன்.
"ஆமா, ஆத்துல அவகூட தகராறு. கோச்சுண்டு பலகாரம் பண்ணாம வந்துட்டேன். இப்ப பசிக்கிறது, நான் சித்த கேண்டின் வர போய்ட்டு வந்துற்ரேன் அந்த 'கடங்காரன்' வந்தா அக்கௌண்ட்ஸ் செக்க்ஷன் போயிருக்கறதா ஷொல்லுங்கோ" என்றபடி கிளம்பிவிட்டார்.

அவர் கொண்டு வந்திருந்த தினசரி அவர் டேபிளில் அநாதையாய் கிடந்தது. சரி மேலாளன் வரும்வரை புரட்டலாம் என்று எடுத்து பார்த்தபொழுது, மூன்றாவது பக்கம் சின்னதாய் ஆனால் கவர்ச்சியாய் நான் பார்த்த சுவரொட்டியில் இருந்த திரைப்படத்தின் ஜாதகமே இருந்தது.

இது ஒரு ஆங்கிலப்படம். நீங்கள் நினைப்பது போல் இது ஹாலிவுட்டில் தயாரான ஆங்கிலப் படமல்ல. இது கோலிவுட்டின் ஆங்கிலப் படம். இது, 'இதுபோன்ற' படங்களின் தற்கால பரிணாம வளர்ச்சி என்று சொல்லலாம். ஆங்கிலப் படங்களுக்கு தணிக்கையின் கடுமை குறைவாக இருப்பதால், ஆங்கிலப் படங்கள் மலிந்துவிட்ட நிலையில், என்போன்ற சுதேசிகளுக்காகவே எடுக்கப்படும் திரைப்படம் இது. ஹாலிவுட் ஆங்கிலப் படங்களில் வரும் வெள்ளை அழகிகள் எத்தனை உரித்துக் காட்டினாலும் அதனால் நம்மவர்களுக்கு எளிதில் கிளர்ச்சி ஏற்படுவதில்லை. மேலும் அவர்களுடைய ரசனை 'இந்த' விஷயத்தில் நம் ரசனையுடன் ஒத்துப்போவதில்லை. இதன் காரணமாகவே முழுக்க முழுக்க கோலிவுட்டின் குட்டி நட்சத்திரங்களை வைத்து நம்மூர்க்காரர்களின் ரசனைக்கேற்ப எடுக்கப்படும் இந்த ஆங்கிலப்படங்கள் பெரும் வரவேற்புக்குள்ளாகி விட்டன. இதில் ஒரு ஹாஸ்யம் என்னவென்றால் அவர்கள் பேசும் ஆங்கிலம். நம்மைப் போலவே திக்கித்திணறி தப்புத்தப்பாக அவர்கள் ஆங்கிலம் பேசும்போது சூழ்நிலை மறந்து பலமுறை சிரித்திருக்கிறேன்.

"பேப்பர்ல அப்டி என்ன சார் விசேஷம்?" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தால் மேலாளன்.

"சார்... அது... வந்து டெண்டர் ஏதாவது வந்திருக்கான்னு..." என்று முடிக்குமுன், ஒரு நக்கலான புன்னகையுடன், "டெண்டர்லாம் இயர் எண்டிங்லதான் வரும், இப்ப ஏதாவது டாக்டர்கள் விளம்பரம்தான் வரும்" என்று சொல்விட்டு ரூமுக்கு போய்விட்டான்.

 முதலில் அவன் சொன்னது எனக்கு புரியவில்லை. மறுமுறை பார்த்தபோது 'அந்த' சித்தவைத்தியரின் விளம்பரம் கண்ணில் பட்டது. நான் அந்த விளம்பரத்தைப் படித்துக் கொண்டிருந்ததாக நினைத்திருக்கிறான். எத்தனை அழகாக வார்த்தையால் உயிர் நிலையிலேயே உதைத்துவிட்டுப் போகிறான். மனதிற்குள் மிக அருவருப்பான வார்த்தைகளால் அவனை திட்டவாரம்பித்தேன்.

"என்ன ஷார் வந்துட்டானா?" என்றபடி கலியபெருமாள் வந்தார்.

"வந்துட்டான் தேவிடியாப்பையன்" என்று நான் சொன்னதும் அவரே ஒரு நிமிஷம் ஆடிப்போய் அவர் இருக்கையில் அமர்ந்துவிட்டார்.

லஞ்ச் அவர் வரை வேலையிலேயே மனம் செல்லவில்லை அவன் செய்த பரிகாசமே கண்முன் நின்றது. என்னைப்பார்த்து என்ன வார்த்தை சொல்விட்டான். என் உருவம் ஒருவேளை அவனை அப்படி நினைக்கத் தூண்டியிருக்கலாம். கல்யாணம் ஆன புதிதில் என் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் விசாலி ரொம்பவே சிரமப்பட்டாள். மிகக் குறுகிய இடைவெளிக்குள் பிறந்த இரண்டாவது பெண்ணையும் மூன்றாவது பெண்ணையும் பார்ப்பவர்கள் டிவின்சா  என்று கேட்பதுண்டு. வைஷ்ணவி பிறந்தபிறகு விசாலியே டாக்டரிடம் ஆபரேஷன் செய்யச் சொல்லிவிட்டாள். அதன்பிறகு விசாலிக்கு 'அந்த' விஷயத்தில் ஆர்வம் சுத்தமாகக் குறைந்துவிட்டது. உடலும் மிகவும் பருத்துவிட்டது. மேலும் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுத்தமாக 'அந்த' விஷயம் மறுக்கப்பட்டுவிட்டது.

அது விசாலியின் அத்தை பெண் கல்யாணம் ஏறக்குறைய அவளுக்கும் விசாலி வயதுதான். விசாலியை அவள் பக்கத்தில் நிறுத்தினால் அவள் அம்மா போலிருப்பாள். வைஷ்ணவி ஒன்றரை வயதிலேயே நன்றாக பேச ஆரம்பித்தாள். இரண்டரை வயதில் எல்லோரும் அவளை எந்தப் பள்ளிக்கூடம் என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படித்தான் அவள் பேச்சில் அதிசயித்து விசாலியின் மாமா ஒருவர் வைஷ்ணவி வாயை கிண்டிக் கொண்டிருந்தார். அதை ஒரு கூட்டமே ரஸித்துக் கொண்டிருந்தது நான் உள்பட. அவர் அத்தனை புராதனமான அந்த கேள்வியை கேட்டார்.

"உனக்கு அம்மா புடிக்குமா? அப்பா புடிக்குமா?"

வைஷ்ணவி, "அம்மாதான்" என்றது.

"ஏன்? அப்பா பிடிக்காதா" என்று இடக்காக கேட்டு வைத்தார்.

"புடிக்கும்... ஆனா அப்பா மோசம்" என்றது.

"ஏன் என்ன பண்ணார்"

"நான் படுக்கறச்ச என் பக்கத்துல படுத்துண்டு கதையெல்லாம் சொல்வார். அப்புறம் நான் முழிச்சுப் பாத்தா அம்மாமேல உக்காண்டுருப்பார்" என்றது.

விசாலி அன்று இரவு முழுக்க அழுதாள். என்னால் அவளை தேற்றவே முடியவில்லை. எண்ணூறு ரூபாய் வாடகைக்கு இதைவிட வசதியான வீடு சாத்தியமில்லை. அதற்குமேல் வாடகை கொடுக்கவும் வக்கில்லை என்ற நிலையில், விசாலி பிடிவாதமாக அந்த சிறிய சமையலறையில் படுக்க ஆரம்பித்ததைக் கூட என்னால் தடுக்க முடியவில்லை. அதற்குபின் இதுபோன்ற கவர்ச்சிப்பட கதாநாயகிகளுடன் வாழ ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆகின்றன.

லஞ்ச் சாப்பிட்டு வந்தவுடன்தான் அந்த எண்ணம் உதித்தது. பர்மிஷன் வாங்கிக்கொண்டு போய்விடலாமா? வீட்டிற்குபோய் என்ன செய்வது? என்று நினைத்தவுடன் அதுவரை கோபத்தின் சூட்டில் சற்று ஒதுங்கியிருந்த குட்டிச்சாத்தான் ஓடி வந்து கழுத்தைக் கட்டிக்கொண்டது. ஏன் வீட்டிற்கு போக வேண்டும்? மூணரை மணிக்குப் போனால் படம் பார்த்துவிட்டு ஐந்தரை மணிக்கு ஆபிஸ் முடிந்து வீடு திரும்புவதுபோல் திரும்பிவிடலாமே என்று காதோடு கொஞ்சியது. ஆனால் பர்மிஷன் கேட்டு அவனிடம்தான் போகவேண்டும். தன்மானம் ஒத்துக்கொள்ள மறுத்தது. கடவுளை துதிப்பவர்களுக்கு கடைசியில்தான் சொர்கம் கிடைக்கும். சாத்தானை துதித்தால் நொடியில் சொர்கத்தை பூமிக்குக் கொண்டுவந்துவிடும் என்பது அடுத்த சில நிமிடங்களில் தெரிந்தது.

மேளாளன் அறைக்குள் இருந்து பெட்டியுடன் வெளியில் வந்து கலியபெருமாளை பார்த்து, "ஐம் நாட் ஃபீலிங் வெல் வீட்டுக்குப் போறேன். ஏதாவது எமர்ஜென்ஸின்னா வீட்டுக்கு காண்டாக்ட் பண்ணுங்க" என்றான்.

"ஒடம்ப நல்லா பாத்துக்கங்க சார் இப்பல்லாம் ரொம்ப அலைச்சல் ஷாருக்கு" என்றார் கலியபெருமாள். அவன் அதை காதிலேயே வாங்காமல் வேகமாக போய்விட்டான். அவன் போன பிறகு கலியபெருமாள் என்னை பார்த்து, "நேத்து டைரக்டர்ஸ் மீட்டிங் பார்க் ஷரட்டான்ல நடந்ததில்ல தீர்த்தம் ஜாஸ்தியாயிடுத்து போல" என்றார்.

"என்ன சார் பண்ணறது. இப்ப புதுசு புதுசா படிப்பு வந்துறுச்சு. படிச்சு வெளியே வந்த உடனே வேலையும் கெடைச்சுட்டா மத்தவனுக்கெல்லாம் மண்டையிலே ஒன்னுமேயில்லைன்னு நெனச்சுக்குறானுக, ஞாயமாக பார்த்தா இந்த போஸ்ட் ஒங்களுக்குத்தான் கெடெச்சிறுக்கணும்" என்றேன். குட்டிச்சாத்தான் தோளை தட்டி சபாஷ் பையா என்றது.

"ம்... எதுக்கும் ஒரு ப்ராப்தம் வேணுமில்லையா? அதிலும் நேக்கு கடைசியா பொறந்துதே அது சாட்ஷாத் சனிபகவான் அதும் ஜாதகம்தான் என்னை இந்த உலுக்கு உலுக்கறது. ஞாயமா என் ஜாதகத்துக்கு நான் நூறுபேருக்கு அன்னதாதாவா இருக்கணும்" என்றார்.

"எனக்குக் கூட சின்னப் பொண்ணு ப்ராப்ளம்தான். அவளுக்குதான் ஒரு நல்ல ஸ்கூல்ல அட்மிஷன் கிடைக்க மாட்டேங்குது. அது விஷயமா இன்னிக்கு ஒருத்தர் மூணு மூணரை மணி வாக்குல வரச்சொன்னார். பர்மிஷன் கேட்டா பாயுவானேன்னு பயந்துகிட்டிருந்தேன். நம்மள மாதிரி ஃபேமிலி பீப்பிள் ப்ராப்ளமெல்லாம் இவனுக்கு நக்கல் சமாச்சாரமாச்சே".

"அவன் கெடக்கான் நீங்க போயிட்டு வாங்கோ நான் பாத்துக்கறேன். அவனுக்கு மட்டும் ஒடம்பு நோவுதுன்னு நோகாம ஷொல்லிட்டுப் போயிட்டான் பாருங்க" என்றார்.

பர்மிஷன் கிடைத்தாயிற்று. அடுத்த ஒரு மணிநேரம் மிக மெதுவாக நகர்வது போலிருந்தது. மூன்று மணிக்கு ஆபிஸ் விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் ஒரு எண்ணம். பேசாமல் வீட்டுக்கே போய்விடலாமா? இத்தனை வயசுக்கப்புறம் இதெல்லாம் தேவையா? யாராவது பார்த்துட்டா எத்தனை அவமானம்? இத்தனை கேள்விகளுக்கும் சாத்தான் தயாராக பதில் வைத்திருந்தது. இந்த இயந்தரகதி வாழ்க்கையில் உன் சந்தோஷத்திற்கு இடமே இல்லையா? உனக்கென்று நீ நேரம் ஒதுக்கக் கூடாதா? வீட்டிற்கு போனவுடன் வழக்கம்போல் பிரச்சனைகள் சூழ்ந்து கொள்ளும். பிறகு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா? இப்படியெல்லாம் எதிர்கேள்வியே பதிலாக அமைந்துவிட்டது.

பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றபிறகு வந்த முதல் பேருந்தே அந்த தியேட்டருக்கு செல்லும் பேருந்தாக அமைந்தது சாத்தானின் வேலையில்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்? வழியில் ஆங்காங்கே அந்த சுவரொட்டிகள் கண்ணில்பட்டு சாத்தானுக்கு சாமரம் வீசின.

பேருந்திலிருந்து இறங்கியவுடன் தியேட்டருக்கு செல்ல சாலையை கடக்கவேண்டும். அந்தப் பக்கத்து பஸ்ஸ்டாண்டின் அருகில்தான் தியேட்டரின் பிரதான வாயில், அந்த பஸ்ஸ்டாண்டில் பள்ளிக்கூடம் விட்ட குழந்தைகளும் சில ஆசிரியைகளும் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நான் உள்ளே நுழையும்போது அவர்களை கடந்துதான் செல்லவேண்டும். என் உருவ அமைப்பு கண்டிப்பாக அவர்களை ஈர்க்கக்கூடும்.

நாற்பத்தி மூன்று வயதிற்குள் என் உருவத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்... என் உருவத்தைப் பற்றிய பிரஞை எனக்கு தோன்றுவது இதுபோன்ற சமயங்களில்தான். நான் இப்போது போட்டுக் கொண்டிருக்கும் கால்சட்டை எப்படியும் நான்கு வருடத்திற்கு முந்தையதாகத்தான் இருக்கும். கல்யாணத்திற்கு பிறகு நான் கடைக்குச் சென்று எனக்காக உடை வாங்கியதாய் ஞாபகம் இல்லை. தீபாவளிக்குக் கூட விசாலி எங்கிருந்தோ நான்கு பேண்ட் பிட்களை கொண்டுவந்து போட்டு, "இதுல எது புடிச்சிருக்கோ எடுத்துக்கங்க மாசம் கொஞ்ச கொஞ்சமா குடுத்தா போறும்" என்பாள். அந்த குறுகிய வாய்ப்புக்குள் நான் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவேண்டும். "அவருக்கு டிசைன்னாலே பிடிக்காது" என்று ஒரு வெளிர் நிற சட்டையை அவளே தேர்ந்தெடுத்து விடுவாள். அது கூட தைப்பதற்கு நேரமின்மையாலோ, பணமின்மையாலோ துணியாகவே தீபாவளி அன்றைக்கு பூஜைக்கு வைக்கப்பட்டு பீரோவுக்குப் போய்விடும். சில சமயம் புது மணத்தம்பதிகள் யாரேனும் திடீர் பிரவேசம் செய்தால் பறிபோய்விடும் வாய்ப்பும் உண்டு. என்றாலும் உண்மையில் உடைகளினால் மட்டுமே என்னை இளமையாக காட்டிவிட முடியாது. இயல்பாகவே சற்று பருமனான உடலுடன் சேர்ந்து கொண்ட தொந்தியால் தோற்றம் வயதை அதிகரித்துதான் சொல்லும்.

முப்பத்தி ஆறிலேயே எனக்கு நரைக்கவாரம்பித்துவிட்டது. அப்பொழுதெல்லாம் நான் மேற்கொண்டிருந்த மைபூசும் பழக்கத்தினால் தற்போது பாதி நரையும் மீதி சிவப்புமாக ஒரு விநோத கலவையாகிவிட்டது கேசம். இத்தனை தடிமனான மூக்குக் கண்ணாடி பிரேம் இப்பொழுதெல்லாம் யாரும் அணிவதில்லை. அதை வேண்டுமானால் கழற்றி பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம் என்றாலும், என் மூக்கின் மேல் உள்ள பள்ளங்கள் நான் நிரந்தரமாக கண்ணாடி அணிபவன் என்பதை பச்சையாய் பறைசாற்றும். சில நேரங்களில் நாம் அணியும் சில விஷயங்கள் நம் உருவத்துடன் ஒன்றிப் போய்விடுகின்றன. காந்தியை நினைத்தவுடன் கண்ணாடியும் கைத்தடியும்தானே ஞாபகத்திற்கு வருகின்றன, அஹிம்சையோ ஹரே ராமோ இல்லையே.

நான் இறங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருப்பது வேறு பேருந்துக்காக என்று என்னைச் சுற்றி நிற்பவர்கள் நினைத்திருக்கக்கூடும். நான் எதிர்சாரியில் ஏதேனும் ஒரு பேருந்து வந்து அந்த ஆசிரியைகளை அள்ளிக் கொண்டு போகாதா? என்பதாய் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். இங்கிருந்து பார்த்தபோது தியேட்டரில் கூட்டம் அதிகமாவது தெரிந்தது. இத்தனை தூரம் வந்து டிக்கட் கிடைக்காமல் போய்விட்டால்? நான் இறங்கியவுடன் நின்றதுதான் தவறு என்று தோன்றியது. தியேட்டருக்குள் அதற்குள் பரபரப்பு தென்பட்டது. ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தவர்களெல்லாம் கவுண்ட்டரை நோக்கி ஓடுவது தெரிந்தது. டிக்கட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு மேலும் தாமதித்தால் இத்தனை பிரயத்தனமும் வீணாகிவிடும். சுற்றும்முற்றும் பார்க்காமல் ஒரு அவசரநடை சட்டென்று உள்ளே போய்விடலாம். எனக்குத்தான் எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல் ஒரு பிரமை. அவரவர்களுக்கு வேறு வேலையில்லையா என்ன?

முடிவு செய்து முடித்தபோது எதிர்திசையின் முனையில் ஒரு பேருந்து வருவது தெரிந்தது. பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தவர்கள் சற்று சுறுசுறுப்படைந்தார்கள். மிக சரியான தருணம் வாய்த்துவிட்டது. இந்தப் பரபரப்பில் யாரும் என்னைக் கவனிக்கப்போவதில்லை என்று வேகமாக சாலையைக் கடக்கும்போது, மிகச்சரியாக அந்த விபத்து நேர்ந்தது.
முதலில் நான் அந்த ஸ்கூட்டரை கவனிக்கவில்லை. பாதி சாலையை கடந்தவுடன்தான் அது கண்ணில் பட்டது. அதன் வேகத்தில் பயந்து நான் அப்படியே நின்றுவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு. நான் சாலையை கடந்த வேகத்தைப் பார்த்து நான் எப்படியும் கடந்துவிடுவேன் என்ற கணிப்பில் அவன் வந்திருக்கிறான். நான் பயத்தில் நடுரோட்டில் நின்றுவிடவே அவனால் சமாளிக்க முடியாமல் அடித்த பிரேக்கில் வண்டி ஸ்கிட்டாகிவிட்டது. மிகப்பரிதாபமாக நடுரோட்டில் விழுந்தான். நல்லவேளையாக பேருந்து சற்று தொலைவில் வந்ததால் அசம்பாவிதம் ஒன்றும் நேரவில்லை. அதற்குள் நாலைந்துபேர் அவன் உதவிக்கு வந்துவிட்டார்கள். அவனுக்கு அவ்வளவாக அடியில்லை என்றாலும், தலை முதல் கால் வரை ஒரு பக்கத்தில் புழுதி அப்பிக் கொண்டிருந்தது. ஸ்கூட்டரின் ஒருபக்கம் (தொடைப்பகுதி என்று வைத்துக் கொள்ளலாமா?) நசுங்கிவிட்டிருந்தது.

"ரோட்டை கிராஸ் பண்ணுனவன் போக வேண்டியதுதான நடுரோட்டுல என்னய்யா டேன்ஸ்" என்றான் எரிச்சலாக.

எனக்கு எந்த பதிலும் தோன்றவில்லை. இங்கு எது பேசினாலும் அபத்தமாகவே முடியும் என்பதாகப் பட்டது.

"கொஞ்சம் பாத்து கிராஸ் பண்ணக்கூடாதா சார் அப்படியென்ன தலைபோற அவசரம்?" என்றார் ஒருவர்.

இப்போது நான் சூழ்நிலையின் நாயகனாகிவிட்டேன். எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் என்னுடைய அவசரத்தை சொல்லமுடியுமானால் அது எத்தனை ரஸமாயிருக்கும் என்று
கற்பனை செய்து பார்த்தேன்.

 எதிர்சாரியில் பேருந்து வந்து நின்றது. கூட்டத்திலிருந்த ஒருவன் "சார்   பஸ்ஸ பாத்துட்டுதான் பாஞ்சுட்டார் போல" என்றான். ஒரு சிலர் சிரித்தார்கள்.

 நான், "ஆமா... பஸ்..." என்றேன்.

"வண்டிய பாத்தியா எப்பிடி நசுங்கியிருக்கு எவ்வளோ செலவாகுமுன்னே தெரியல" என்றான் வண்டி ஓட்டி வந்தவன்.

அதற்குள் ஒருவர், "அட நீ மட்டும் கொஞ்ச நஞ்ச ஸ்பீடா வந்த? கண்ணை  மூடிக்கிட்டு ஓட்னா இப்பிடித்தான்" என்றார்.

எனக்கு ஆதராவாய்தான் எல்லோரும் பேசிக் கொண்டிருப்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

"ரெண்டு பக்கமும் பஸ்ஸ்டாண்ட் இருக்கு இவ்வளோ வேகமா வரலாமா?"

"ஸ்கூட்டர்ல எல்லாம் இவ்வளோ ஸ்பீடு வரக்கூடாது சார்"

"மெதுவா வந்திருந்தா பிரேக் போட்டவன்ன நின்னுருக்குமுல்ல"
என்பதாக அவனைத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் கோபமாய் வண்டியை உதைத்துக் கிளப்பிக் கொண்டு அதே வேகத்தில் போனான்.

"இவனுகள திருத்தவே முடியாதுஙு சார் நீங்க போய் பஸ்சுல ஏறுங்க பஸ் கிளம்பப் போகுது" என்றார் ஒருவர்.

நான் ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். அவசரத்தில் பஸ் எங்கே போகிறது என்று பார்க்கவில்லை. கண்டக்டர் "எங்க போகணும்?" என்றார். நான் உடனே, "ஒரு டூ ருபீஸ்" என்றேன்.

No comments:

Post a Comment